பாஜக எதிர்ப்பு கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கப் போவது இல்லை: பாரத் ராஷ்டிரிய சமிதி!

பீகார் மாநிலம் பாட்னாவில் ஜூன் 12-ல் நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவது இல்லை என பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி அறிவித்திருக்கிறது.

அடுத்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்கிற முயற்சியை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மேற்கொண்டுள்ளார்; அவருடன் ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவும் இணைந்துள்ளார். பாஜக அல்லாத பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்களை தொடர்ந்து சந்தித்த நிதிஷ்குமார், பீகார் மாநிலம் பாட்னாவில் ஜூன் 12-ந் தேதி அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் மமதா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துவிட்டனர். ஜூன் 12-ந் தேதி கூட்டத்தில் தம்மால் பங்கேற்க இயலாது என திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் செல்ல இயலாத நிலையில் திமுக மூத்த தலைவர்களில் ஒருவர் பாட்னா கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு உண்டு. ராகுல் காந்தி வெளிநாடு சென்றிருந்தாலும் காங்கிரஸ் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தெலுங்கானா மாநில ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ்., பாட்னா எதிர்க்கட்சிகளின் சங்கமத்தில் பங்கேற்க போவது இல்லை என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகனும் தெலுங்கானா அமைச்சருமான கேடி ராமராவ் கூறியதாவது:-

இந்தியாவில் பிரதான எதிர்க்கட்சி என்பதே கிடையாது. இந்த இடத்தை நிரப்புவதற்குதான் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி என்ற பெயரையே பாரத் ராஷ்டிரிய சமிதி என மாற்றி இருக்கிறோம். இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சி என்ற இலக்கை நோக்கித்தான் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை பாஜக அல்லாத, காங்கிரஸ் அல்லாத மெகா கூட்டணியைத்தான் உருவாக்க விரும்புகிறோம். தெலுங்கானா மாடல் வளர்ச்சியையே ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான முன் மாதிரியாக வைக்கிறோம் நாங்கள். இப்போதைக்கு அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் கால் பதிக்க கவனம் செலுத்தி வருகிறோம். ஆகையால் பாட்னா கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.