மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம். மாநில அரசின் அனுமதி இல்லாமல், அணை கட்ட முடியாது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
தர்மபுரியில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்வர் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு 9 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ரூ.233 கோடிக்கு முதலீடு திரட்டி வந்துள்ளார். இதன் மூலம் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்காக முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
பாஜ., எம்பி மீதான பாலியல் புகார் குறித்து நடவடிக்கை கோரி, மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக, உலக மல்யுத்த சம்மேளனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம். மாநில அரசின் அனுமதி இல்லாமல், அணை கட்ட முடியாது. ஒன்றிய அரசு 3 அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கையை ரத்து செய்துள்ளது. அதை திரும்ப பெற வேண்டும். எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில்தான், வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு முருகன் காந்தியின் டுவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இக்கணக்குளை முடக்க சட்ட கோரிக்கை வந்ததாக டுவிட்டர் நிர்வாகம் கூறுகின்றது. தமிழ்நாடு காவல்துறை இப்படிப்பட்ட கோரிக்கை வைக்கவில்லை என தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் செயல்கள் ஏராளமாக நடந்துள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் பின்னணி இவை அனைத்திற்கும் உண்டு என்பதை உலகமறியும். தற்போதைய டுவிட்டர் கணக்கு முடக்கத்திற்கும் இப்பின்னணி உள்ளதா? எனக் கேள்வி உள்ளது. உடனடியாக இத்தடைகளை நீக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகின்றது. இவ்வாறு முத்தரசன் கூறியுள்ளார்.