கோரமண்டல் ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கூறியுள்ளதாவது:-
கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசா மாநிலம், பாலோசோர் மாவட்டம், பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே பயங்கர விபத்திற்குள்ளாகி 230-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உடனடியாக ஒரிசா மாநில முதலமைச்சரை தொடர்பு கொண்டு மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்திருக்கிறார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட ஒரிசாவிற்கு அமைச்சர் பெருமக்கள் அடங்கிய ஒரு குழுவையும் சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளார். நிவாரண உதவித் தொகையும் அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களை தமிழ்நாடு அழைத்து வர சிறப்பு ரயில் இயக்கப்படுமென கூறியுள்ளார். இவ்வளவு விரிவான ஏற்பாடு செய்துள்ளது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. விபத்தில் இறந்தவர்களையும் மற்றும் காயம் அடைந்தவர்களையும் மீட்டு உடனடியாக அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து சிறப்புச் சிகிச்சை அளிக்கவேண்டும். மேலும், அவர்களுக்கு நிவாரண உதவி விரைந்து கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
விபத்துக்கான காரணத்தை உடனடியாக ஆய்வு செய்து எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் தடுக்க ஒன்றிய ரயில்வே துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். விண்வெளியில் சாதனை செய்யும் அளவிற்கு அறிவியல் துறையில் முன்னேறிய நம் நாட்டில் இதுபோன்று உயிர்பலி ஆகும் கோரவிபத்துக்கள் அதிகாரிகளின் கவனக்குறைவாலும், அலட்சியத்தினாலுமே ஏற்படுகிறது. விபத்துக்கு காரணமாக அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் விபத்திற்கு பொறுப்பேற்று ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டுக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.