மீண்டும் இதுபோன்ற விபத்து நிகழாது: அஷ்வினி வைஷ்ணவ்!

மீண்டும் இதுபோன்ற விபத்து நேராதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் பாலசோர் அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள கோபால்பூர், கந்தபாரா, பாலசோர், பட்ராக், சோரோ, கட்டாக் உள்ளிட்ட நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “மீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. மறுசீரமைப்புப் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து முழுமையாக விசாரணை நடத்துவோம். மீண்டும் இதுபோன்ற நிகழ்வு நடக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.