தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானை வனத்துறையிடம் சிக்கியது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சின்னைக்கானல் மற்றும் சாந்தம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் “அரிசி கொம்பன்” என்று அழைக்கப்படும் காட்டு யானை வலம் வந்தது. அரிசி கொம்பன் காட்டு யானை ஊருக்குள் புகுந்து அங்குள்ள கிராம மக்கள் 8 பேரை கொன்றது. விளை நிலங்களையும் சேதப்படுத்தியது. இதைத்தொடர்ந்து கேரள வனத்துறையினர் அந்த காட்டு யானையை மயக்க ஊசிகள் செலுத்தி பிடித்து, தமிழக-கேரள எல்லையில் உள்ள பெரியாறு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேதக்கானம் என்ற வனப்பகுதியில் விட்டனர். அந்த யானையின் நடமாட்டத்தை கண்டறிய கழுத்தில் ரேடியோ காலர் எனப்படும் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி தொடர்ந்து கண்காணித்தனர். அரிசிகொம்பன் யானை கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மங்கல தேவி கண்ணகி கோவில் வழியாக தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது. அப்போது தேனி மாவட்டம் மேகமலை, ஹைவேவிஸ் மலைப்பகுதியில் யானை தஞ்சம் அடைந்தது. அங்கு அடிக்கடி தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
இந்த சூழலில் கடந்த மாதம் 27-ந்தேதி ‘அரிசி கொம்பன்’ காட்டு யானை கம்பம் நகருக்குள் வந்தது. நகருக்குள் யானை வீதி, வீதியாக ஓடியது. திடீரென யானை ஊருக்குள் புகுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். கம்பம் நகர மக்களை கதிகலங்க வைத்த இந்த யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதற்கிடையே, ராயன்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சண்முகா நதி அணை பகுதியில் கடந்த சில தினங்களாக யானை முகாமிட்டு இருந்தது. அரிசி கொம்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்ததில், அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்தனர். வனப்பகுதியில் இருந்து வந்து தனியார் ஒருவரின் தோட்டத்திற்குள் யானை நின்று கொண்டிருந்த போது வனத்துறையினர் யானையை பிடித்தனர். 3 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அவற்றை லாரி மூலம் வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். எனினும் யானை எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்ற தகவல் தெளிவாக தெரியவில்லை. தேனி சின்ன ஓவலாபுரம் பகுதியில் பிடிபட்ட அரிசி கொம்பன் யானை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.