வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஜூன் 1-ஆம் தேதியும், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஜூன் 5-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னா், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. இதனிடையே, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெயில் தாக்கம் குறையாமல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இத்தகைய சூழலில் பள்ளிகளை திறப்பது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்திய நிலையில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14-ஆம் தேதியும், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் வெயிலின் தாக்கம் குறையாததால், பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும். வருகிற 15-ஆம் தேதி வரை கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி 1-12 வரையான வகுப்புகளுக்கு வரும் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.