மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் மல்யுத்த வீராங்கனைகள் சந்திப்பு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் ஆகியோர் நேற்று நள்ளிரவில் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு வலியுறுத்துமாறு கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில்தான் மல்யுத்த வீராங்கனைகள் தாங்கள் பெற்ற ஒலிம்பிக் விருது உள்ளிட்ட சர்வதேச விருதுகளை கங்கையில் வீசி எறிவதாக அறிவித்து விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திக்கத் கோரிக்கையை ஏற்று அந்தப் போராட்டத்தைக் கைவிட்டிருந்தனர். அப்போது அரசுக்கு அவர்கள் ஐந்து நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில்தான் மல்யுத்த வீராங்கனைகள் நள்ளிரவில் அமித் ஷாவை சந்தித்துள்ளனர். பிரிஜ் பூஷன் மீது விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சரிடம் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி போராட்டத்தைத் தொடங்கிய பின்னர் நடந்த முதல் மேல்மட்ட சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.