ஒடிசாவில் சடலங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தை பார்வையிட்டதாகவும் தனக்கு அது வேதனையான அனுபவம் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவிலிருந்து சென்னை வந்த பிறகு சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
ஒடிசா இரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளை செய்திடவும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் என்னையும், அமைச்சர் அண்ணன் சிவசங்கர் அவர்களையும், அரசு அதிகாரிகளையும் உடனே செல்லச் சொன்னார்கள். நாங்கள் நேரடியாக சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று அருகில் இருக்கின்ற மருத்துவமனைக்கு சென்றிருந்தோம். அங்குதான் அனுமதிப்பட்டிருப்பதாக சொல்லியிருந்தார்கள். அங்கு சென்று ஆய்வு செய்த்ததில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதன் பிறகு உடல்கள் ஏதாவது வைக்கப்பட்டிருக்கிறதா என்று பிணவறைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கேயும் நாங்கள் சென்று விசாரித்தோம். அங்கும் தமிழர்கள் யாரும் இல்லை. அதன் பிறகு அங்கிருக்கக்கூடிய அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தோம். தமிழர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று சொன்னார்கள்.
அதன் பிறகு நம் முதலமைச்சர் அவர்களுடன் Zoom call -ல் பேசும்போது, கோரமண்டல் விரைவு இரயிலில் முன்பதிவு செய்த 127 பயணிகளில் 28 பேர் தமிழர்கள் என்று சொன்னார்கள். நாங்கள் இன்றைக்கு(நேற்று) மதியம் 1.30 மணிக்கு அந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தோம். ஒடிசா அரசு அங்கு இதற்காக பிரத்யேகமாக அழைப்பு மையம் (call centre) போன்று ஏற்பாடு செய்திருக்கிறார்கள், உதவி மையம் எண்ணும் கொடுத்திருக்கிறார்கள். அங்கும் சென்று நாங்கள் கேட்கும்போது, அங்கேயும் உதவி மையம் எண்ணையும் கொடுத்திருக்கிறார்கள். தமிழர் காணவில்லை என்பது போன்ற எந்தவிதமான ஒரு அழைப்பும் வரவில்லை என்று சொன்னார்கள். 8 பேரை மட்டும் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தது. இப்போது சமீபத்தில் எங்களுக்குக் கிடைத்த கணக்குப்படி, அங்கு இருக்கக்கூடிய அரசு அதிகாரிகள் எங்களுக்குத் தெரிவித்திருப்பது என்னவென்றால், அதில் 2 பேரை trace செய்துவிட்டதாகவும், காலையில் பெயர்களைக் கொடுத்திருந்தோம், பத்திரிகைகளில் வந்திருந்தது. இன்னொரு பயனாளி ஜகதீசன் அவர்களிடமும் பேசுவிட்டோம், அவரும் பாதுகாப்பாக இருக்கிறார். மீதமுள்ள 6 பயணிகள் அருண், கல்பனா, கமல், மீனா, ரகுநாதன், கார்த்தி ஆகியோர் எல்லோருமே பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று உடன் சென்ற பயணிகள் இரயில்வே காவல் துறையிடம் சொல்லி, இரயில்வே காவல் துறையினர் நமக்கு சொல்லியிருக்கிறார்கள்.
அவர்களுடைய Coach எண். D3, D4, D7, D9, S1, S2 ஆகியவற்றில் பயணித்தவர்களுக்கு பாதிப்பு எதுவும் கிடையாது. இது உடனிருந்த பயணிகள் கொடுத்திருக்கக்கூடிய செய்தி. நம்முடைய அரசு அதிகாரிகள் இன்னும் அங்குதான் தங்கியிருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் இன்னும் நல்ல செய்திகள் வரும் என்று நம்புகிறேன்.
கேள்வி: கமல் இரயிலில் பயணிக்கவில்லை என்று சொல்கிறார்களே? அமைச்சர்
பதில்: அப்போது பாதுகாப்பாகத் தானே இருக்கிறார்கள். பாதுகாப்பாகத்தான் இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
கேள்வி: எந்த மாதிரியான ஆலோசனை மேற்கொண்டீர்கள்?
அமைச்சர் பதில்: இந்த 28 பேரில் 21 பேரிடம் பேசிவிட்டோம். 7 பேரை மட்டும் trace செய்ய முடியாமல் இருந்தது என்ற சந்தேகம் இருந்தது என்று தெரிவித்தோம். இங்கேயே இருந்து எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு வாருங்கள் என்று சொன்னார்கள். இப்போது சிறிது தெளிவு கிடைத்திருக்கிறது. ஒடிசா அரசு அந்த 275 நபர்கள் இறந்திருப்பதாக கண்டறிந்து இருக்கிறார்கள். அதையும் அவர்கள் அதிகாரபூர்வமாக (official) வெளியிட்டிருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை அவர்கள் net-ல் போட்டு யாராவது வாருங்கள், வந்து அடையாளம் காட்டுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். அதில் 88 பேர் தான் இப்போது வரைக்கும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்களை அடையாளம் காண்பதற்கு அவர்கள் காத்திருக்கிறார்கள். அதிலும் இன்றைக்கு காலையில் அந்த புகைப்படங்களையும் எடுத்துப் பார்த்தோம், மிகவும் வருத்தமாக இருக்கிறது. மீதமுள்ள 6 நபர்களிடமும் பேசிவிட்டோம் என்றால், தமிழ்நாட்டிலிருந்து யாருமே பாதிக்கப்படவில்லை என்ற ஒரு முடிவிற்கு வரலாம்.
இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம். மிகவும் வருத்தமாக இருந்தது. ஒன்றிய அரசு, எதனால் இந்த தவறு நடந்தது என்பதைக் கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மறுபடியும் இதுபோன்ற தவறுகள் நடக்கக்கூடாது. நேற்று நம்முடைய துணைப் பொதுச் செயலாளர் திரு. ராஜா அவர்கள் பேசும்போது கூட சொல்லியிருந்தார்கள், தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ச்சியடைந்த காலத்தில் இவ்வளவு பெரிய விபத்து. அதைக் கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டும். சரியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
கேள்வி: ஒடிசா முதலமைச்சருடன் நீங்கள் ஆலோசனை நடத்தியிருந்தீர்கள், அது குறித்து
அமைச்சர் பதில்: நேற்று நிலவரப்படி 8 நபர்கள் trace செய்ய முடியாமல் இருந்ததால் இறந்தவர்களுடைய உடலை புகைப்படம் எடுத்து உடனே கொடுங்கள். அதை நாங்கள் எங்களுடைய அரசுக்கு அனுப்பி எங்களால் trace செய்ய முடியுமா, தமிழ்நாட்டு மக்கள் யாராவது பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்று கேட்டோம். அவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஒடிசா அரசு சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. நாங்கள் அங்கு மருத்துவமனைக்குச் சென்று கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் மருத்துவமனையில் இருந்தோம். உங்களுடைய பத்திரிகை நிருபர்களுடைய நண்பர்களும் அங்கு வந்திருந்தார்கள். அவர்களுக்கே தெரிந்திருக்கும், அங்கு யாரும் தமிழர்களே இல்லை. நாங்களே ஒவ்வொரு தளமாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களையெல்லாம் பார்த்தோம். அதற்குப் பிறகு சடலங்கள் எல்லாம் வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று பார்த்தோம். வேதனையான ஒரு அனுபவம் தான்.
கேள்வி: நேற்று விமானம் மூலமாக 6 நபர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் அங்கு உங்களை தொடர்பு கொள்ள முடியாமல் இங்கு வந்திருக்கிறார்கள், ஏன் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை?
அமைச்சர் பதில்: ஒடிசா அரசு தான் அவர்களை அங்கிருந்து பேருந்தின் மூலமாக புவனேஸ்வர்-க்கு கொண்டு விட்டார்கள். நாங்கள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள மருத்துவனைக்குச் செல்வதற்கு 1 மணி ஆகிவிட்டது. அவர்கள் நேற்று அதிகாலையிலே கிளம்பி விமானத்தின் மூலமாக பாதுகாப்பாக வந்துவிட்டார்கள். நாங்கள் அவர்களை trace செய்வதற்குத் தான் முயற்சி செய்து கொண்டிருந்தோம்.
கேள்வி: 21 மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களை வைத்திருக்கிறார்கள், அந்த கட்டமைப்பை பாத்திருக்கிறீர்கள், தமிழ்நாடு கட்டமைப்புகளும் இருக்கிறது, உங்களால் அதை ஒப்பிட முடிகிறதா?
அமைச்சர் பதில்: இது அதற்கான நேரம் இல்லை.
கேள்வி: தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வீரர் அவர் இந்திய அரசை தொடர்பு கொண்டு மிகப் பெரிய அளவில் அவர் பங்காற்றியிருக்கிறார், அது குறித்து.
அமைச்சர் பதில்: அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த ஊரைச் சேர்ந்த மக்கள் பலர் தொடர்ந்து இரண்டு நாட்களாக இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த மக்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி: ஒரு மணிக்கு அங்கிருந்து இரயில் புறப்பட்டிருக்கிறது, அதில் யார்யார் ஏறியிருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் இருக்கிறதா?
அமைச்சர் பதில்: அதிலும் முன்று, நான்கு பேர் வருவதாக கேள்விப்பட்டோம். வந்தால்தான் தெரியும்.
கேள்வி: ஒடிசா முதல்வர் நம் மாநிலத்திலிருந்து ஏதாவது உதவி கேட்டிருக்கிறாரா?
அமைச்சர் பதில்: அதுபோன்று எதுவும் கேட்கவில்லை. ஆனால் நாங்கள் எந்தவிதமான உதவியானாலும் சொல்லுங்கள், செய்கிறோம் என்று கூறிவிட்டு வந்திருக்கிறோம்.
கேள்வி: மூன்று மாதத்திற்கு முன்பே இதுபோன்ற தவறு நடந்திருக்கிறது, தொடர்ந்து இதுபோன்று நடக்கிறது? நீங்கள் என்ன கோரிக்கை வைக்கிறீர்கள்?
அமைச்சர் பதில்: எங்களுடைய துணைப் பொதுச் செயலாளர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து தெளிவாக சொல்லியிருக்கிறார்கள், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு யாராவது பொறுப்பு ஏற்க வேண்டும். என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள், யார் மேல் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை பார்த்துவிட்டு எங்கள் தலைவர் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.