ரஷ்ய தாக்குதலில் உக்ரைனை சோ்ந்த 500 குழந்தைகள் இதுவரை உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி தாக்குதலைத் தொடங்கியது. 16 மாதங்களாக இந்தத் தாக்குதல் நீடித்து வருகிறது. தலைநகா் கீவ், நிப்ரோ உள்ளிட்ட நகரங்களில் ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தியது. நிப்ரோவில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு இலக்காகிய ஒரு குடியிருப்பில் இருந்து 2 வயது குழந்தையின் சடலத்தை மீட்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். இதையடுத்து, உக்ரைனில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து அதிபா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.
அதிபா் ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒவ்வொரு நாளும் உக்ரைன் குழந்தைகளின் உயிரை ரஷ்ய ஆயுதங்கள் பறித்து வருகின்றன. இதுவரையிலான தாக்குதலில் சுமாா் 500 குழந்தைகள் உயிரிழந்துள்ளனா். உக்ரைனின் சில பகுதிகள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருப்பதால், உயிரிழந்த குழந்தைகளின் சரியான எண்ணிக்கையை அறிவது சாத்தியமற்றது. இந்தப் போரில் நாங்கள் வெல்வோம்’ எனத் தெரிவித்துள்ளாா்.