ஒடிசா மாநிலம் பாகநாகாவில் ஜூன் 2ம் தேதி நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் உயிரிழப்பு 288ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 2 தேதி ஒடிசா மாநிலம் பாலசூர் பகுதியில் கொல்கத்தா சாலிமர்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூர்- ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மொத்தம் மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 270 பேர் பலியாகினர்; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சுமார் 190 உடல்கள் பாலாசோரில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான உடல்கள் அடையாளம் காணும் நிலையிலேயே இல்லை. முன்பதிவு அற்ற பெட்டியில் பயணித்ததால் பெயர் உள்ளிட்ட விவரங்களும் இல்லை. என்ன செய்வது எனத்தெரியாமல் உறவினர்கள் தவித்து நிற்கின்றனர். இந்நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 288ஆக அதிகரித்திருக்கிறது. உயிரிழந்த 288 பேரில் 205 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாகநாகாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 83 பேர் யாரென்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மரபணு சோதனை மூலம் உடல்களை அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்துக்கான காரணம் குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிக்னலிங்கில் உள்ள எலக்ட்ரானிக் இன்டர்லாக் அமைப்பில் செய்யப்பட்ட மாற்றமே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் விபத்தின் பின்னணியில் நாசவேலை உண்டா? என்பதை கண்டறிய சி.பி.ஐ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்து. இதனைத் தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் சிபிஐ இன்று விசாரணையை தொடங்கியுள்ளது.10 பேர் கொண்ட சிபிஐ குழு அதிகாரிகள் விபத்து நடந்த பகுதியில் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்து அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 40 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ரயில் பெட்டிகளில் இருந்து மீட்கப்பட்ட 40 பேரின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்றும், மின்சார கேபிள் அறுந்து பெட்டிகள் மேல் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து அவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனவும் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவரது எஃப்ஐஆரிலும் பலரது மரணத்திற்கு மின்சாரமே காரணம் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. பல உடல்கள் அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு சிதைந்துள்ள நிலையில் 40 உடல்களில் எந்த காயமும் இல்லை என்றும் உடலில் எங்கேயும் ரத்தப்போக்கும் இல்லை என்றும் அந்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் அவர்களின் மரணத்திற்கு உயர் அழுத்த மின்சார கம்பிகள் அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததே காரணம் என்றும் ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
