ராகுல்காந்தியின் வெளிநாட்டு பேச்சு நாட்டின் பெருமையை சிதைக்கிறது: வானதி சீனிவாசன்!

ராகுல்காந்தியின் வெளிநாட்டு பேச்சு நாட்டின் பெருமையை சிதைக்கிறது என்று கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.

ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பா.ஜனதா சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவை சித்தாபுதூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு வந்துள்ளார். குறிப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனை மிகவும் எளிமையாக இருக்கிறது. நமது நாட்டில் 40 சதவீதம் டிஜிட்டல் பயன்பாடு இருக்கிறது. ஏற்றுமதி 35 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்து துரதிஷ்டவசமானது. இந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற விரும்பவில்லை. எதையும் மூடி மறைக்கவில்லை.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை வைத்துக்கொண்டு பா.ஜனதாவை வீழ்த்திவிடலாம் என்று ராகுல்காந்தி, நினைத்தால் அது ஒருபோதும் பலிக்காது. ராகுல்காந்தி வெளிநாட்டில் இருந்து நமது நாட்டுக்கு எதிராக பேசி வருவது நாட்டின் பெருமையை சிதைக்கும் வகையில் இருக்கிறது. அவர் நமது நாட்டை சேர்ந்தவர்தானே!. ஏன் வெளிநாட்டில் பேசுகிறார். இவ்வாறு அவர் பேசுவதை உடனே நிறுத்த வேண்டும்.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் விளம்பர பலகை வைப்பது அதிகரித்து வருகிறது. விளம்பர பலகை வைக்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் சம்பவம் நடக்கும்போது மட்டும் நடவடிக்கை எடுக்கும் நிலை இருக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரசும், தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் தி.மு.க.வும் தமிழக நலனை காப்பாற்ற போகிறார்களா என்பதை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.