மாநில வளர்ச்சி பற்றி கவர்னருக்கு புரியவில்லை: மு.க.ஸ்டாலின்!

முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை கவர்னர் மறைமுகமாக விமர்சித்து இருந்த நிலையில் அவருக்கு பதில் அளிக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். அப்போது தமிழகத்தின் வளர்ச்சி பற்றி ஒருவருக்கு தெரியவில்லை என்று மறைமுகமாக கவர்னருக்கு கண்டனம் தெரிவித்தார்.

கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் மோதல் தொடங்கியது. தற்போது அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கவர்னர் விமர்சிக்கும் நிலை உருவாகி உள்ளது. முதல்-அமைச்சர் சமீபத்தில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்தை கவர்னர் மறைமுகமாக விமர்சித்தார். வெளிநாடு சென்று பேசி அழைப்பதால் முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள். அதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அதுவே அவர்களை ஈர்க்ககூடியதாக இருக்கும் என்று கவர்னர் தெரிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தலா ரூ.25 லட்சம் வீதம் மொத்தம் ரூ.125 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களின் திறப்பு விழா நேற்று மாலை சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு காணொலி காட்சி வழியாக 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை திறந்து வைத்தார். விழாவில், அவர் பேசும்போது, மக்கள் நலம் பேணுவதில் மிகச்சிறந்த தமிழ்நாடாகவும், நமது மாநிலம் இன்றைக்கு தலைநிமிர்ந்து நிற்கிறது. ஆனால் இப்படி தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய இந்த மாநிலத்தின் வளர்ச்சி, மாநிலத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கும் மட்டும் புலப்படவில்லை என்று கவர்னரை மறைமுகமாக கண்டித்தார். நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நமது திராவிட மாடல் ஆட்சியை பொறுத்தவரையில் கல்வி, மருத்துவம் ஆகியவற்றை 2 கண்களாக நாம் போற்றி பாராட்டி கொண்டிருக்கிறோம். அதை செயல்படுத்தியும் கொண்டிருக்கிறோம். கல்வியில் சிறந்த தமிழ்நாடாகவும், மக்கள் நலம் பேணுவதில் மிகச்சிறந்த தமிழ்நாடாகவும் நமது மாநிலம் இன்றைக்கு தலைநிமிர்ந்து நிற்கிறது. ஆனால் இப்படி தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய இந்த மாநிலத்தின் வளர்ச்சி, மாநிலத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கும் மட்டும் புலப்படவில்லை. அவர், திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக்கொள்ளாத நிலையில் சில கருத்துகளை விமர்சனங்களாக்கி தினந்தோறும் ஏதாவது ஒரு செய்தியை மக்களை குழப்பும் வகையில் செய்து கொண்டிருக்கிறார். அதற்கெல்லாம் மக்கள் கவலைப்பட மாட்டார்கள். ஏனெனில் மக்கள் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். என்னை பொறுத்தவரையில் அவர் தொடர்ந்து இப்படி சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போது தான் நமக்கெல்லாம் ஒரு எழுச்சி ஏற்படும். மக்களும் தெளிவாக அதனை புரிந்துகொள்வார்கள்.

நம்மை ஆளாக்கிய கருணாநிதியின் நூற்றாண்டு விழா, கடந்த 3-ந் தேதியில் இருந்து கொண்டாட தொடங்கி இருக்கிறோம். இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட திட்டமிட்டு நமது அரசின் சார்பில், ஏனென்றால் இந்த அரசே அவரது அரசு தான். 5 முறை ஆட்சி பொறுப்பில் இருந்து தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செய்து காட்டியவர். குறிப்பாக ஏழை-எளிய மக்களுக்காக கண்ணொளி காக்கும், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டம், வருமுன் காப்போம் திட்டம், கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம், 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டம் போன்ற எண்ணற்ற சுகாதார திட்டங்கள், நமது நாட்டிலேயே முன்னோடி திட்டங்களாக இன்றைக்கு கொண்டுவரப்பட்டு இன்றளவும் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. எனவே கருணாநிதி பாதையில் தான் நமது அரசின் நல வாழ்வு திட்டங்களும் இன்றைக்கு செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், நாம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரையிலும் தொழில்துறை சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தான் நான் அதிகம் பங்கேற்று வருகிறேன். அதற்கு அடுத்து நான் பங்கேற்பது, மருத்துவத்துறை சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகள் தான். அந்தளவு பல முன்னேற்றங்களை நாம் இன்றைக்கு பார்த்து கொண்டிருக்கிறோம்.

இந்திய அளவில் பல்வேறு சுகாதார குறியீடுகளில் முதல் 3 மாநிலங்களின் வரிசையில் தமிழகம் இருக்கிறது. இதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும். அது எவர்? என்பது உங்களுக்கு தெரியும். பொதுவாக ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான குறியீடுகளில் ஒன்றாக, மக்கள் நல்வாழ்வு விளங்கி வருவது மட்டுமன்றி, தனிநபர் சிகிச்சை செலவு குறைவாக இருப்பதும் நமது மாநிலத்தின் மருத்துவத்துறையின் சிறப்பை வெளிப்படுத்துகிறது. அந்த அடிப்படையில் தான் 5-8-2021 அன்று ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற மகத்தான திட்டத்தை நான் தொடங்கிவைத்தேன். தொடர்ந்து மாநிலம் முழுவதும் விரிவாக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 51 ஆயிரத்து 661 பயனாளிகளுக்கு முதன் முறை சேவைகளும், 3 கோடியே 4 லட்சத்து 71 ஆயிரத்து 896 பயனாளிகளுக்கு தொடர் சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டிற்கே முன்னோடியான இந்த திட்டத்தை புகழ்ந்து உலக சுகாதார அமைப்பே அதன் இணையதளத்தில் பாராட்டு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதை தயவு செய்து குறை சொல்கின்ற அவர் (கவர்னர்) படித்து பார்க்க வேண்டும்.

சமீபத்தில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்றேன். அதை கூட இங்கிருக்கும் எதிர்க்கட்சி தலைவர் எப்படி விமர்சித்தார் என்பது உங்களுக்கு தெரியும். முதலீட்டை ஈர்க்க போகவில்லை. முதலீடு செய்ய போய் இருப்பதாக கூறினார். அது அவர்கள் புத்தி. அதனால் அந்த எண்ணம்தான் அவர்களுக்கு வரும். எனவே, அதைப்பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்னது போல, கிண்டியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி நூற்றாண்டு நினைவு பன்னோக்கு மருத்துவமனை மிக பிரமாண்டமான வகையில் கட்டப்பட்டு இருக்கிறது. அது வருகிற 15-ந் தேதி திறப்பு விழா நிகழ்ச்சி நடக்க உள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறையானது மாரத்தான் ஓட்டம் போல மிகப்பெரிய பணிகளை செய்து வருகிறது. கொரோனா அலையையும் எதிர்கொண்டு மக்களையும் காத்து, மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்புகளையும் வளர்த்து எடுத்து இருக்கிறோம். இதற்கு காரணமான மாரத்தான் மா.சு.வுக்கு (மா.சுப்பிரமணியன்) நன்றியை, பாராட்டுகளை இந்த நேரத்தில் தெரிவிக்கிறேன்.

இந்த வரிசையில் தான் இன்னொரு மகத்தான திட்டமாக நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட இருக்கின்றன. இதுதொடர்பான முறையான அறிவிப்பை கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைந்திருப்பது போல, நகர்ப்புறங்களிலும் நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் அமைக்க இருக்கிறோம் என்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தேன். 708 நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில் ரூ.177 கோடியில் தமிழகத்தில் இருக்கும் மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைக்க உத்தரவிட்டேன். கடந்த 1-4-2022 அன்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்புக்கு இணங்க, அங்குள்ள நகர்ப்புற பகுதிகளில் இயங்கி வரும் மொகல்லா கிளினிக் எனப்படும் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை நான் பார்வையிட்டேன். துறையின் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வந்தனர். அப்போது ஏற்கனவே தமிழ்நாட்டில் கிராமப்புற சுகாதார நிலையங்களின் கட்டமைப்புகளை வலுப்படுத்தியிருக்கிறோம். அதனை நகர்ப்புற பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யவேண்டும் என்று அப்போதே திட்டமிட்டோம். அந்த அடிப்படையில் தான் இந்த திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் உட்கட்டமைப்பு ஏற்படுத்தவதற்கான அனுமதி 2021-22-ம் ஆண்டு 593 மையங்களுக்கும், 2022-23-ம் ஆண்டு 115 மையங்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுக்கான கட்டிட பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.125 கோடி. இந்த மையத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் ரூ.66 கோடி மதிப்பீட்டில் 172 வகை முக்கியமான மருந்துகளும், 64 வகை அவசியமான ஆய்வக சேவைகளும் ஆண்டு முழுவதும் தங்கு, தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் நலவாழ்வு திட்டம் என்பது இந்தியாவுக்கே முன்னோடியான திட்டமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மூலம் நகர்ப்புற மக்களுக்கு குறிப்பாக குடிசைவாழ் மக்கள் மற்றும் நலிந்த மக்கள் தரமான முறையில் சிகிச்சை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் துணை மையங்களாக செயல்படும். அனைத்து ஆரம்ப சுகாதார சேவைகளையும் மக்கள் எந்தவித பொருள் செலவின்றி அவர்களின் வசிப்பிடத்தின் பக்கத்திலேயே எளிதில் தடையின்றி பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இன்று (நேற்று) 500 மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகிக்கொண்டே வரும் என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்விடத்துக்கு அருகிலேயே பள்ளிகள் இருப்பதை போல, அதன் அருகிலேயே நிரந்தர மருத்துவமனைகள் என்ற சூழலை நிச்சயமாக விரைவில் உருவாக்குவோம். அதை மக்களும் நல்ல வகையில் பயன்படுத்தி சிறப்பித்து தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டாக்டர் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ. டாக்டர் நா.எழிலன், துணை மேயர் மு.மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.