சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கிய காரணமே டாஸ்மாக் கடைகள் தான்: ஜிகே வாசன்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கிய காரணமே டாஸ்மாக் கடைகள் தான் என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கோவை சின்னியம்பாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு, மின் கட்டணத்தை உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம் என்பது தான் தமிழக மக்களின் கோரிக்கையாகும். நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் ஜூலை 1 முதல் 4.70 சத வீதம் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ள நிலையில், தொடர்ந்து பல ஆண்டுகளாக முழு அளவிலான மின் கட்டண திருத்தத்தை காண உள்ளதும் ஏற்புடையதல்ல. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வால் சிரமத்தில் இருக்கும் பொது மக்களுக்கு மின் கட்டணம் உயர்ந்தால் பெரும் சுமையாக இருக்கும். அரசுக்கும் மக்களின் தேவைக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்து வரும் வேளையில் மின் கட்டண உயர்வு நியாயமில்லை. எனவே தமிழக அரசு, இந்த ஆட்சி முடியும் வரையிலாவது மின் கட்டண உயர்வு குறித்த பேச்சுக்கே இடம் இல்லை என்ற நிலையில் செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் நிலவும் சட்டம் -ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கிய காரணமே டாஸ்மாக் கடைகள் தான். இதனால் பல வழிகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அதிகம் கூடக் கூடிய இடங்களில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி அதனை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அமைச்சர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை பார்த்து பேச வேண்டும். பொறுப்பற்ற முறையில் வார்த்தைகளை விடக்கூடாது. அவர்கள் மற்றவர்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

அடுத்த மாதம் 15-ந் தேதி மூப்பனாரின் பிறந்த நாளையொட்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தஞ்சையில் மிக பிரமமாண்டமாக மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்துகட்சி தலைவர்களும் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.