தமிழ்நாட்டில் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது!

தமிழ்நாட்டில் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

உபர், ஓலா நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் கார், ஆட்டோக்கள் வாடகை கட்டணத்தில் பயணம் செய்யும் வசதி தற்போது மிகவும் பிரபலமாகி உள்ளது. பஸ் ஸ்டாண்டுகள், ரெயில்வே ஸ்டேஷன்கள், ஏர்போர்ட்கள் போன்ற இடங்களில் இந்த வசதியை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இப்போது ரேபிடோ பைக் வசதியும் தரப்பட்டு வருகிறது. அதன்படி, வாடிக்கையாளர்களை பைக்கில் வந்து அவர்கள் செல்லும் இடத்துக்கு அழைத்து செல்கிறார்கள். இதற்கும் குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆட்டோ, காரை விட இதற்கு கட்டணம் குறைவாக இருப்பதால், நிறைய பேர் இந்த ‘ரேபிடோ பைக்’ வசதியை பயன்படுத்த துவங்கி உள்ளனர். அதுவும் இல்லாமல், இதற்கு காலம் நேரம் எதுவும் கிடையாது. அதிகாலை முதல் இரவு வரை எப்போது வேண்டுமானாலும் இந்த வசதி உள்ளதால், பலராலும் விரும்பப்பட்டு வருகிறது.

சமீபத்தில் மெட்ரோ ரெயில் நிறுவனமும் ரெயில் நிலைய பெண் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இப்படி இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளதால், ஆட்டோ மற்றும் வாடகை கார் தொழிலாளர்களுக்கு இது பெருத்த பாதிப்பை உண்டுபண்ணி வருவதால், அவர்கள் நொந்துபோய் உள்ளனர். இந்த வாகனமுறைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள். இதனிடையே, தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிகளில், பயணிகளுக்கு பாதுகாப்பு குறைபாடு உள்ளதாகவும் புகார்கள் கிளம்பி உள்ளன. இதுகுறித்துதான், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-

கடந்த அதிமுக ஆட்சியில் சீர்குலைக்கப்பட்ட சம்பள விகிதங்களை, திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பழையபடி, கலைஞர் வழங்கியபடி இப்போது 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கி வருகிறோம். பிற மாநிலங்களில் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தாலும் தமிழகத்தில் உயர்த்தப்படவில்லை. ஓய்வு பெற்றவர்களுக்கான பஞ்சப்படி கூடுதலாக வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. அது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். கடந்த 5 ஆண்டுகளில் புதிய ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பணிக்கு எடுக்கப்படவில்லை. இப்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் 2 ஆயிரம் பஸ்களை வாங்குவதற்கு மாநில அரசின் நிதியை ஒதுக்கி உள்ளார். இதற்கான டெண்டர் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது. இதுதவிர ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் 2,400 பஸ்கள் வாங்குவதற்கான பணியும் தொடங்கி உள்ளது. 6 மாத காலத்துக்குள் புதிய பஸ்கள் நடைமுறைக்கு வந்து விடும். பைக் டாக்சி என்பது தனிநபர் பயன்படுத்தும் வாகனம். அதனை வாடகைக்கு விடும் வாகனமாக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. அது இன்னும் வாடகைக்கு விடப்படக்கூடிய வாகனமாக அங்கீகரிக்கப்படவில்லை. தமிழக அரசைப் பொறுத்தவரை பைக் டாக்சியை பயன்படுத்தக்கூடாது. பைக் டாக்சியை வாடகைக்கு விடுவதற்கு இதுவரை எந்தவிதியும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே தமிழ்நாடு அரசை பொறுத்தவரை அதனை பயன்படுத்தக் கூடாது. காவல்துறையும் பல்வேறு இடங்களில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.