மேல்பாதி கிராமத்தில் அமைந்திருக்கும் திரௌபதி அம்மன் ஆலயத்தில் பட்டியல் சமூக மக்கள் வழிப்பட எதிர்ப்புகள் எழுந்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கோயிலை மாவட்ட நிர்வாகம் பூட்டி சீல் வைத்திருக்கிறது. இந்நிலையில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையை மீட்கவும் இன்று தொல் திருமாவளவன் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தின் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தரிசனம் செய்திருக்கிறார். இது அங்கிருக்கும் மற்றொரு சமூகத்தினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இளைஞரை தாக்கியுள்ளனர். இப்படியாக விஷயம் வெளியில் பெரியதாக வெடித்திருக்கிறது. இதனையடுத்து விசிக எம்பி ரவிக்குமார் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு பிரச்னை சுமூகமாக பேசி முடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தின் முடிவில், பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கை அப்படியே மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக கொடுக்கப்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகம் கோயிலை மூடி சீல் வைத்துள்ளதால் விசிக அதிருப்தியடைந்தது.
இதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டோருக்கு நீதி கேட்டும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையை மீட்கவும் இன்று தொல் திருமாவளவன் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் திராவிடர் கழகம் சார்பில் வீரமணி, சிபிஎம் சார்பில் கே.பாலகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் கோபண்ணா, சிபிஐ சார்பில் வீரபாண்டியன், மதிமுக துரை வைகோ, கொளத்தூர் மணி மற்றும் மருதையன் ஆகியோர் பங்கேற்கின்றனர். ஆர்ப்பாட்டம் இன்று மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
இந்தியாவில் ஆயிரக்கணக்கான திருக்கோயில்களைக் கொண்ட பகுதி தமிழ்நாடு, மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் அவர்களின் கீழ் இருந்த திருக்கோயில் நிர்வாசும் மன்னராட்சி முடிந்து பிரிட்டிஷ் ஆட்சி ஆரம்பித்தபோது ஆங்காங்கே செல்வாக்கு மிக்க தனி நபர்களால் கையகப்படுத்தப்பட்டது. அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த காரணத்தால் திருக்கோயில் நிர்வாகத்தை முறைப்படுத்துவதற்கு 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு ரெவின்யூ போர்டின் (Reveneu Board) மேற்பார்வையின் கீழ் திருக்கோயில்களைக் கொண்டு வந்தது. அப்போதும் அவை திறம்பட நிர்வகிக்கப்படவில்லை என்பதால் சமயக் கொடைகள் சட்டம்-1863 என ஒரு சட்டம் இயற்றப்பட்டு அதன் அடிப்படையில் அந்த நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டது. 1908 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிவில் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு-92 இன் கீழ் சிவில் நீதிமன்றங்கள் மூலம் திருக்கோயில்கள் தொடர்பான சச்சரவுகளைத் தீர்த்துக் கொள்வதென ஆக்கப்பட்டது.
நீதிக் கட்சி ஆட்சியின்போது திருக்கோயில் நிர்வாகத்துக்கென்று சிறப்புச் சட்டமொன்று 1927இல் இயற்றப்பட்டது. சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு 1951 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையங்கள் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. பரம்பரையாக இருந்து வந்த திருக்கோயில் ஊழியர்கள் அகற்றப்பட்டு எல்லாவற்றுக்கும் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் பணியமர்த்தம் செய்வதற்கு அந்த சட்டம் வழி கோலியது. அதை எதிர்த்துப் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. உச்ச நீதிமன்றம் இறுதியாக அந்த சட்டம் செல்லும் எனத் தீர்ப்பளித்தது. அதன் பின்னர் இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டம்-1959 உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் 43,283 திருக்கோயில்கள்: 45 மடங்கள்; மடங்களோடு இணைந்த 68 கோயில்கள்; குறிப்பான கொடைகள் 1127: அறநிலையக் கொடைகள் 1264; சமணக் கோயில்கள் 22 என மொத்தம் 45, 809 சமய நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்டவை பட்டியல் இடப்படாத கோயில்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறான கோயில்களின் எண்ணிக்கை 34,436; இரண்டு லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள பட்டியல் இடப்பட்ட கோயில்களின் எண்ணிக்கை 3770: இரண்டு லட்சம் முதல் 10 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள கோயில்களின் எண்ணிக்கை 595; 10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ள கோயில்களின் எண்ணிக்கை 578.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் நீதிக் கட்சி ஆட்சியின்போதும் திருக்கோயில்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட போதிலும் அவற்றில் சமத்துவம் நிலவவில்லை. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் அப்படித்தான் இருந்தது. 1892 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தரைக்கூட கொச்சின் மாகாணத்தில் உள்ள கொடுங்காளூர் பகவதி அம்மன் கோயிலில் நுழைய அனுமதிக்கவில்லை. 1897 மே மாதம் 14 ஆம் நாள் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் ஜமீனுக்கு உட்பட்ட கமுதியில் உள்ள சிவன் கோயிலில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த 15 பேர் சாமி கும்பிட்டனர் என்பதற்காக ஜமீன்தார் சேதுபதி வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் அவ்வாறு சாமி கும்பிட்டது குற்றம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த வழக்கு இங்கிலாந்தில் இருந்த ப்ரிவி கவுன்சில் வரை சென்றது, 1908 ஜூன் 16 இல் அங்கும் அப்படியே தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில் 1929 ஆம் ஆண்டு அனைத்துப் பிரிவினரையும் பாகுபாடில்லாமல் கோயிலில் அனுமதிக்க வகை செய்யும் சட்ட மசோதா ஒன்றை புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கினார். அவரது அழுத்தத்தின் காரணமாக காந்தியடிகளும், காங்கிரஸ் கட்சியும் கோயில் நுழைவுக்காகக் குரலெழுப்ப வேண்டி வந்தது. 1932 இல் ஏற்பட்ட பூனா ஒப்பந்தத்துக்குப் பிறகு காந்தியடிகள் கோயில்களில் வழிபாட்டுத் தீண்டாமையை அகற்ற மிகப்பெரிய பரப்புரையை மேற்கொண்டார். அதன் விளைவாக இந்தியா முழுவதும் பல கோயில்கள் அனைத்துப் பிரிவினரின் வழிபாட்டுக்காகத் திறந்துவிடப்பட்டன.
கோயில் நுழைவுப் போராட்ட வரலாற்றில் 1939 ஆம் ஆண்டுக்கு முக்கிய இடம் உண்டு. அந்த ஆண்டில்தான் மலபார் கோயில் நுழைவுச் சட்டம் இயற்றப்பட்டது. தமிழ்நாட்டிலும் முக்கியமான பெரிய கோயில்களில் பட்டியலினத்தவர் வழிபடக்கூடிய சூழல் உருவானது. 1947இல் சென்னை மாகாண முதலமைச்சராக பிரகாசம் இருந்தபோது கோயில் நுழைவு சட்ட மசோதா ஒன்றைக் கொண்டுவந்தார். அது சட்டம் ஆவதற்கு முன்பே அவரது ஆட்சி கவிழ்ந்தது. ஓ.பி.ராமசாமி ரெட்டியார் முதலமைச்சர் ஆனார். அந்த மசோதவை அவரும் அறிமுகம் செய்தார். சென்னை கோயில் நுழைவு அனுமதிச் சட்டம்-1947 என்ற அந்த சட்டம்-1947 ஜூன் 2 ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. அது அனைத்து திருக்கோயில்களிலும் இந்துக்கள் அனைவரும் தடையின்றி வழிபடுவதை உறுதி செய்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு எவர் ஒருவரையும் பொது இடத்தில் நுழைய விடாமல் தடுப்பது சட்டப்படி குற்றமென ஆக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 15இல் அது தெளிவாக்கப்பட்டுள்ளது. அதுபோலவே அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 17 தீண்டாமையைக் கடைப்பிடிப்பதைக் குற்றம் என அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கே வழிகாட்டும் விதமாக 1971ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வண்ணம் ‘இந்து சமய அறநிலையக் கொடைகள் ஈட்டம்-1959ல்’ திருத்தம் செய்து சட்டமொன்றை இயற்றினார். அதை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அர்ச்சகர் பதவியென்பது பரம்பரை உரிமை அல்ல என்ற சட்டத் திருத்தத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களில் ஆகமவிதிகளின்படிதான் அர்ச்சகர் நியமனம் செய்யப்படவேண்டும் என்று தீர்ப்பளித்தது (Seshammal & Ors, Etc. Etc vs State Of Tamil Nadu on 14 March, 1972) அதனால் 1971 இல் தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்துக்கு 50% வெற்றியே கிட்டியது. கோயில்களை ஜனநாயகப்படுத்தும் தனது முயற்சியில் மனம் தளராத தலைவர் கலைஞர் 2006 ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு ஏதுவாக சட்டம் ஒன்றை மீண்டும் இயற்றினார். ஆகமங்களில் பயிற்சி பெற அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளையும் திறந்தார். அவற்றில் பயிற்சி பெற்றவர்களில் 27 பேரை தற்போதைய திமுக அரசு அர்ச்சகர்களாக நியமித்தது. அதிமுக ஆட்சிக் காலத்தில் மூடப்பட்ட அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறந்தது. சட்டரீதியாக இவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதினும் பட்டியல் சமூக மக்கள் பொதுக் கோயில்களில் வழிபடுவதற்கு இப்போதும்கூடப் பல இடங்களில் சமுகத் தடை உள்ளது. எந்தவொரு கோயிலிலும் வழிபடுவதற்கு சாதி அடிப்படையில் தடை போடுவது குற்றம் என்றாலும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில்கூட இத்தகைய சாதிய பாகுபாடு நிலவுவது அதிர்ச்சி அளிக்கிறது. அந்தத் துறையின்கீழ் உள்ள 43283 திருக்கோயில்களில் பல்லாயிரக்கணக்கான கோயில்களில் பட்டியல் சமூக மக்கள் வழிபட முடியவில்லை.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் இயற்றி கருவறைத் தீண்டாமையை ஒழிக்க முற்பட்டிருக்கும் சமூகநீதி அரசான திமுக அரசு இந்த வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே நமது வேண்டுகோள். அண்மைக்காலமாக இந்தக் கோயில்களை மையமாக வைத்தும் இவற்றைக் கையகப்படுத்தும் தீய நோக்கத்தோடும் சனாதன அமைப்புகள் திட்டமிட்ட முறையில் செயல்படுகின்றன. வழிபாட்டுத் தீண்டாமைப் பிரச்சனை அதிகரிப்பதற்கு அந்த அமைப்புகளின் தூண்டுதலும் ஒரு காரணமாகும். தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்காகப் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்:
* தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கோயில்களிலும் அனைத்து சமூகத்தினரும் சாதிய பாகுபாடின்றி வழிபடுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். அதைத் தடுப்பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலயத்துறையின் கீழுள்ள 43283 கோயில்களிலும் அறங்காவலர் குழுக்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். தற்போது 780 கோயில்களில் மட்டும்தான் அறங்காவலர் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக இந்து அறநிலையத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பேடு தெரிவிக்கிறது.
* தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்துத் திருக்கோயில்களிலும் அறங்காவலர் குழுக்களை அமைக்கும்போது சட்டப்படி ஆதி திராவிடர் ஒருவரும். பெண் ஒருவரும் அறங்காவலர்களாக நியமிக்கப்பட வேண்டும். அதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்யவேண்டும்.
* தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் அனைத்திலும் வழிபாட்டில் சமத்துவம் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் முதலமைச்சர் அறிக்கையொன்றைக் கேட்டுப்பெற வேண்டும். அந்த அறிக்கையைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடவேண்டும்.
* இந்து சமய அறநிலையச் சட்டம்-1959, பிரிவு 106இல் ‘எவ்வித பாகுபாடுமின்றி பிரசாதம், தீர்த்தம் வழங்கவேண்டும்’ என உள்ளது. அதற்கு முரணாக செயல்படும் பூசாரிகள் எவராயிருந்தாலும் அவர்களை பூசாரிப் பொறுப்பிலிருந்து நீக்குவதோடு அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
* இந்து சமய அறநிலையத்துறைக்குக் கீழுள்ள கோயில்கள் அனைத்திலும் அதைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அறிவிப்புப் பலகையொன்று பொருத்தப்பட வேண்டும்.
* இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களில் பணியாற்றும் கிராமக் கோயில் பூசாரிகளின் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் கிராமக்கோயில் பூசாரிகள் வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாரியத்தில் உறுப்பினராக ஆவதற்கு ‘அந்தக் கோயில் அனைவரும் வழிபடும் திருக்கோயிலாக இருத்தல் வேண்டும் என வழிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதைப்போலவே கிராமக் கோயில் பூசாரிகள் ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான தகுதியிலும், ‘அந்தப் பூசாரி பணிபுரிந்த கோயில் அனைத்துத் தரப்பினரும் வழிபடும் கோயிலாக இருக்க வேண்டும் என்ற விதி சேர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.