உக்ரைனின் காகோவ்கா அணை இடிந்து விழுவதற்கு முன்பு இருந்ததை விட, உக்ரைனில் மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று ஐ.நா. சபையின் உயர் உதவி அதிகாரி எச்சரித்துள்ளார்.
ஐ.நா. சபையின் மனிதாபிமான உதவிகளுக்கான ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும், துணைச் செயலாளர், ஜெனரல் மார்ட்டின் கிரிஃபித்ஸ், ஒரு வருடமாக நடைபெற்று வரும் ரஷ்ய-உக்ரைன் போரின் விளைவாக குண்டு வீசி தகர்க்கப்பட்ட காகோவ்கா அணையிலிருந்து வெளியேறும் வெள்ளத்தினால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு அசாதாரண நிலையாக 7,00,000 பேருக்கு உடனடியாக குடிநீர் தேவைப்படுகிறது. உக்ரைன் போன்ற உலகின் மிக முக்கியமான உணவு வழங்கும் பிராந்தியத்தில் பெரிய அளவு வெள்ளப்பெருக்கு ஏற்படுவது, வரும் காலங்களில் குறைந்தளவு தானிய ஏற்றுமதிக்கே வழிவகுக்கும். இது தவிர்க்க முடியாதது. இதனால், உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலையும் உயரலாம். மேலும் பல லட்சம் மக்களுக்கு அவர்களின் தேவைக்கும் குறைவான அளவு உணவு மட்டுமே கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம். இது ஒரு தொடரப்போகும் பெரும் பிரச்சனை. ஆனால், இப்பொழுது வெளிப்படுவது (வெள்ளப்பெருக்கு), ஒரு செயலின் (குண்டு வீச்சு) விளைவுகளினால் ஏற்படும் பாதிப்பின் தொடக்கம் மட்டுமே. இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த புதன்கிழமையன்று காகோவ்கா நீர்மின் அணை உடைந்ததும், அதனைத் தொடர்ந்து நீர்த்தேக்கத்திலிருந்து நீர் டினிப்ரோ நதியில் முழுமையாக வெளியேற்றப்பட்டதும், ஏற்கனெவே பீரங்கி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் ஒரு வருடத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு பிராந்தியத்தின் துயரத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. டினிப்ரோ நதியின் மேற்குக் கரை பகுதியை உக்ரைன் தன்னகத்தே கொண்டுள்ளது. அதே சமயம், ரஷ்ய துருப்புகள் எளிதில் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய தாழ்வான கிழக்குப் பகுதியைக் கட்டுப்படுத்துகின்றன. அணையும் நீர்த்தேக்கமும் தெற்கு உக்ரைனின் குடிநீருக்கும் நீர்ப்பாசனத்திற்கும் அத்தியாவசியமானது. இந்தப் பகுதி கெர்ஸ்ன் பிராந்தியத்திலுள்ளது. இந்த இடத்தை செப்டம்பர் மாதம் ரஷ்யா சட்டவிரோதமாக ஒரு வருடமாக ஆக்கிரமித்துள்ளது. உக்ரேனிய உதவிக் குழுக்கள் மூலம் மட்டுமே ஐ.நா. சபை உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள வெள்ளம் பாதித்த பகுதிகளில் 30,000 மக்களை தேடி சென்றுள்ளதாகவும் ஆனால், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருக்கும் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளை அடைய ரஷ்யா இதுவரை அனுமதிக்கவில்லை, எனவும் கிரிஃபித்ஸ் கூறினார்.
மேலும் இது சம்பந்தமாக கூறிய கிரிஃபித்ஸ், புதன்கிழமையன்று ரஷ்யாவின் ஐ.நா. தூதரான வாசிலி நெபென்சியாவை தாம் சந்தித்ததாகவும், உக்ரைனில் உள்ள ஐ.நா. குழுக்கள் அந்த பகுதிகளில் நேரிடையாக சென்று அங்குள்ள உக்ரைன் மக்களுக்கு உதவியும், ஆதரவும் தர அனுமதிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும், இது நடக்கும் என தாம் நம்புவதாகவும், அவர் கூறினார்.
“உயிரைக் காப்பாற்றுவதற்கு அவசர கால நடவடிக்கை அத்தியாவசியமானது. அதன் பின்னணியில், உக்ரைன் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலும் 7,00,000 மக்களுக்கு முறையான குடிநீரின் பற்றாக்குறை ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருத்திருக்கிறது” என்று அவர் கூறினார்.
முக்கிய விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு அணையிலிருந்து விநியோகிக்கப்பட்ட குளிர்ச்சியான நீரை தற்பொழுது தொடர்ந்து வழங்குவதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார். மேலும், “போரின்போது நிலத்தில் பதிக்கப்பட்ட கண்ணிவெடிகளுடன் கூடிய பகுதிகளிலும் வெள்ள நீர் வேகமாக பாய்ந்துள்ளது. அந்த கண்ணி வெடிகள் மக்கள் சற்றும் எதிர்பார்க்காத இடங்களில் மிதந்து வரலாம்,” எனவும் கிரிஃபித்ஸ் குறிப்பிட்டார். “இது ஒரு தொடர் சிக்கல். மக்கள் இன்று உயிர் வாழ வழி செய்வதில் தொடங்கி, எதிர்காலத்தில் அவர்களுக்கு நம்பிக்கையூட்டவும் ஏதேனும் செய்ய வேண்டும்” என கூறினார்.