இமாச்சல் மற்றும் கர்நாடகா மக்கள் தேர்தலில் பா.ஜ.க.விற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் சில தலைவர்கள் அதிகாரத்திற்காக, கட்சியின் சித்தாந்தத்தை கைவிட்டதாக பிரியங்கா குறிப்பிட்டார்
மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று ஜபல்பூரில் பிரசாரத்தை தொடங்கினார். பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் அரசாங்கம் ஊழலில் மூழ்கிவிட்டது. வேலைவாய்ப்பை வழங்க தவறிவிட்டது. ‘வியாபம்’ மற்றும், ‘ரேஷன் விநியோகம்’ ஆகியவற்றில் ஊழல் நடந்திருக்கிறது. மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சியின் 220 மாத ஆட்சியில் 225 ‘மோசடிகள்’ நடந்துள்ளன. கடந்த 3 ஆண்டுகளில், பா.ஜ.க. அரசாங்கத்தால், மாநிலத்தில் 21 அரசு வேலைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது, எனது அலுவலகத்தில் இதனை 3 முறை சரி பார்த்ததற்கு பிறகு, இது உண்மைதான் என கண்டறிந்தேன். நாங்கள் (காங்கிரஸ்) பல இரட்டை-எஞ்சின் மற்றும் மூன்று-எஞ்சின் அரசாங்கங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இமாச்சல் மற்றும் கர்நாடகா மக்கள் தேர்தலில் (பா.ஜ.க.விற்கு) தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.
காங்கிரசிலிருந்து பா.ஜ.க.விற்கு மாறிய தலைவரும், தற்போதைய மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவை, பெயரை குறிப்பிடாமல் கிண்டல் செய்த பிரியங்கா காந்தி, மத்திய பிரதேசத்தில் சில தலைவர்கள் அதிகாரத்திற்காக, கட்சியின் சித்தாந்தத்தை கைவிட்டதாக குறிப்பிட்டார். சிந்தியாவுக்கு விசுவாசமான எம்.எல்.ஏக்கள் கடந்த மார்ச் 2020 வருடம் காங்கிரஸிலிருந்து வெளியேறி, கமல்நாத் அரசாங்கத்தை வீழ்த்தி, தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் ஆட்சிக்கு வர வழி வகுத்தனர்.