மருத்துவ படிப்புகளுக்கு பொது கலந்தாய்வு நடத்துவதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நாடு முழுவதும் மையப்படுத்தப்பட்ட பொது கலந்தாய்வு முறையில் கலந்தாய்வு நடத்தும் விதிமுறையை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தமிழக கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் மருத்துவ கல்வியில் ஆண்டு தோறும் ஒரு லட்சம் கல்வி இடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த நிலையில் நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை 100 சதவீதம் மையப்படுத்த அதாவது பொது மருத்துவ கலந்தாய்வு நடத்த தேசிய மருத்துவ கழகம் முன் வந்துள்ளது. அதன்படி அரசு, தனியார் மற்றும் தன்னாட்சி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஒரு கட்ட கலந்தாய்வு மூலம் நடத்த என்.எம்.சி. திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் மருத்துவக் கல்வியில் சேர மாணவர்கள் எதிர்கொள்ளும் நீண்டகால செயல்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், மாணவர் சேர்க்கையை எளிமைப்படுத்த முடியும் என்றும் என்.எம்.சி. கருதுகிறது.
2019 தேசிய மருத்துவ வாரியச் சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் உள்ள இளநிலை மருத்துவ பட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த தேர்வர்களின் அனைத்திந்திய தரவரிசைப் பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிடும். இந்த அனைத்திந்திய தரவரிசைப் பட்டியலைக் கொண்டு – அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு மத்திய தொகுப்பு இடங்கள், மாநில தொகுப்பு இடங்கள் தனியார் கல்லூரிகளில் உள்ள மாநில/நிர்வாக/ வெளிநாடு வாழ் இந்தியர்கள் தொகுப்பு இடங்கள் மத்திய கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகம்,நிகர்நிலைப் பல்கலைக்கழகம், எய்ம்ஸ், ஜிப்மர் பல்கலைக்கழகம் ஆகிய பிரிவுகளின் கீழ் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
இதில், 15% அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு, மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள 100% இடங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள், எய்ம்ஸ், ஜிப்மர், தன்னாட்சி பொருந்திய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்குனரகம் நடத்தும். மாநில அரசு மருத்துவக் கல்லூரிக்கான 85% மாநில ஒதுக்கீட்டிற்கான சேர்க்கை அந்தந்த மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட அதிகாரம் கொண்டவர்களின் பரிந்துரையின் படி அமையும். அனைத்திந்திய தரவரிசைப் பட்டியலின் படி, மாநில அளவில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வு மேற்கொள்ளப்படும். மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்குனரகம்/மருத்துவ கலந்தாய்வு குழு மேற்கொள்ளும் கலந்தாய்வில் ( 15% அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு, மத்திய பல்கலைக்கழகம்) மத்திய அரசின் இடஒதுக்கீடு முறை பொருந்தும். அதேபோன்று, 85% மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் அந்தந்த மாநிலங்களில் நிலவும் இடஒதுக்கீடு நடைமுறை பொருந்தும். மேலும், அந்தந்த மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு வகைகளுக்கான இடங்களில் அந்தந்த மாநிலங்களில் நிலவும் இடஒதுக்கீடுச் சட்டங்கள் பொருந்தும்.
இந்நிலையில், நாடு முழுவதும் மையப்படுத்தப்பட்ட பொது கலந்தாய்வு முறை நடத்தும் விதிமுறையை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. மருத்துவ இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் வெளியிடும் அறிவிப்பின் படியே நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படியே, 15% அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு இடங்களுக்கு மத்திய அரசும், இதர மாநில இடஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசும் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு நடைமுறையை எளிமைப்படுத்தவும், அதிகமான மருத்துவ இடங்கள் வீணாகாமல் தடுக்கவும் இந்த பொது கலந்தாய்வு நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2019 தேசிய மருத்துவ வாரியச் சட்டத்தின் கீழ், மாநிலங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இடங்களில் சேர்க்கைக்கு கலந்தாய்வை அந்தந்த மாநில அரசு அதிகாரிகள் தனியே நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள தற்போதைய விதிமுறை மாநில அரசின் உரிமையை பறிப்பதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநில அரசு சட்டம் இயற்றிய நிலையில், தற்போது கலந்தாய்வு உரிமையும் பறிபோகும் சூழல் எழுந்துள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மருத்துவ கல்வி சேர்க்கை ஒழுங்குபடுத்துதல்-2023 விதியின் மூலம் இந்தியா முழுவதும் பொது கலந்தாய்வை கொண்டு வரும் தேசிய மருத்துவ கழகத்தின் முயற்சியை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை தொடர்பாக கடந்த மார்ச் மாதம் தமிழக அரசுக்கு சுகாதார சேவை பொது இயக்குனர் அதுல் கோயல் கடிதம் எழுதியிருந்தார். அதில், மருத்துவ கல்வி இடங்கள் முடங்குவதை தவிர்க்கவும், மாணவர் சேர்க்கையை எளிமைப்படுத்தவும் மருத்துவ கவுன்சிலிங் குழு மூலம் அனைத்து அரசு, தனியார் மற்றும் தன்னாட்சி கல்வி நிறுவனங்களின் கல்வி இடங்களுக்கு மையப்படுத்தப்பட்ட பொதுக் கவுன்சிலிங் நடத்தப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது. அதில், பொது கலந்தாய்வை கடுமையாக எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மருத்துவ படிப்புகளுக்கு பொது கலந்தாய்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொது கலந்தாய்வு முறையினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார். மருத்துவ படிப்பிற்கான பொது கலந்தாய்வு முறைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்போம் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன், நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 100 சதவிகித இடங்களுக்கும் மத்திய அரசே கலந்தாய்வு நடத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் அறிவிப்பால் தமிழ்நாட்டில் உள்ஒதுக்கீடு பெறும் மாணவர்களின் மருத்துவ கல்வி வாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கப்படும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.