எங்களுக்கு சலுகைகள் வேண்டாம், கெளரவம்தான் வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் மிக மிக முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
தேவேந்திரகுல வேளாளர் மக்களை பட்டியலினத்திலிருந்து நீக்கி வேளாண் மரபினராக அறிவிக்க வேண்டும் என்றும், தங்களுக்கு சலுகைகள் வேண்டாம், கெளரவம்தான் வேண்டும் என்றும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் அதிரடியாக அறிவித்திருக்கிறார். காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஜான்பாண்டியன் கூறியதாவது:-
தேவேந்திரகுல வேளாளர் இனத்தை பட்டியலினத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பது எங்கள் நீண்ட கால கோரிக்கை. எங்களுக்கு சலுகைகள் வேண்டாம். கெளரவம்தான் வேண்டும்.
தமிழரை பிரதமராக்க அமித் ஷா ஆசைப்படுவதை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது. ஆனால், அது முடியுமா? முடியாதா என்பதெல்லாம் தேர்தல் காலத்தில் எடுக்கப்படும் நிலைப்பாடு ஆகும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் இல்லை. அது திமுகவுடன் கைகோர்த்து கொண்டுள்ளது.. அந்த கட்சியில் தொண்டர்களும் இல்லை. வெறும் தலைவர்கள்தான் இருக்கிறார்கள்.. அதே நிலைப்பாட்டில்தான் பாஜகவும் உள்ளது.. ஆனாலும், அவர்கள் இன்று வளர்ந்துள்ளனர். திமுக அரசில் நிறைய குறைகளும், நிறைகளும் இருக்கின்றன. மதுவை ஒழிப்போம் என்றார்களே. ஆனால் செய்யவில்லை. பாலியல் சம்பவங்கள், கொலை, கள்ளச்சாராயம் பெருகிவிட்டது.. கள்ளச்சாராய விவகாரத்தில் கீழ்மட்ட அதிகாரிகளை மாற்றியுள்ளனர். ஆனால் மேல்மட்ட அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை இல்லையே ஏன்?
வேங்கைவயல் சம்பவம் மூடி மறைக்கப்பட்டுள்ளது. உண்மையான குற்றவாளி தெரிந்தும் மறைப்பது மிகவும் தவறு. அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்கும் நீதி விசாரணை கமிஷனை அமைக்க வேண்டும். அதற்கு காவல்துறையை தன்னுடைய கையில் வைத்துள்ள ஸ்டாலின் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜான்பாண்டியன் கூறினார்.