இன்று கூடுகிறது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களம் இறங்கியுள்ளன. அதிமுகவும் தேர்தல் பணிகளை தொடங்கி தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இன்று நடைபெறும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி விரிவாக விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் அதில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் தொடர்பான அறிவிப்பை கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வெளியிடவுள்ளனர். இதன் மூலம் இன்று நடைபெறும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து வரும் நிலையில் கூட்டணி கட்சியான அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். நேற்று ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் 1991- 1996 ஆம் ஆண்டு கால கட்டத்தில் ஊழல் நடந்ததாக ஒப்புக் கொள்கிறீர்களா என நெறியாளர் கேட்டதற்கு ஆம், முன்னாள் முதல்வர்கள் சிறை தண்டனையை அனுவித்தார்கள் என ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார். இது அதிமுகவினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணாமலைக்கு தலைவராக இருக்கும் தகுதியே இல்லை. அவருக்கு நாவடக்கம் தேவை. எங்கள் கட்சித் தலைவியை வரலாறு தெரியாமல் அரசியல் தெரியாமல் விமர்சித்துள்ளார். இதை எப்படி நாங்கள் லேசில் எடுத்துக் கொள்ள முடியும். இனி அண்ணாமலை இப்படியே பேசினால் வாங்கிக் கட்டிக் கொள்வார். காலை மிதித்தால் நாங்களும் மிதிப்போம். கூட்டணியை தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடும் என தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல் கூட்டணி தலைமையை ஆலோசிக்காமல் தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெல்வோம் என்றும் தென் சென்னையில் வெற்றியை பாஜகவுக்கு உரிதாக்குவோம் என அமித்ஷா தெரிவித்திருந்தார். இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இன்று நடக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.