20 வருடங்களாக ஒரு எம்எல்ஏ கூட இல்லாத பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்களை பெற்றுத் தந்ததே அதிமுகதான். ஆனால், அண்ணாமலையோ ஜெயலலிதா குறித்தே தரக்குறைவாக பேசுவது, அவர் ஒரு முதிர்ச்சி இல்லாத தலைவர் என்பதையே காட்டுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி நாளுக்கு நாள் பிசுபிசுத்து வந்த நிலையில், அதில் ஒரே அடியாக கல்லை தூக்கிப் போட்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இரு தினங்களுக்கு முன்பு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அண்ணாமலை பேட்டி அளித்திருந்தார். அதில், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் (ஜெயலலிதா) ஊழல் தண்டிக்கப்பட்ட வரலாறு இருக்கிறது” அதனால்தான் தமிழ்நாட்டை ஊழல் மலிந்த மாநிலம் என நாங்கள் கூறுகிறோம்” என அண்ணாமலை கூறியிருந்தார். இந்த விவகாரம் தான் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. “எங்களுடன் கூட்டணியில் இருந்து கொண்டே எங்கள் தலைவர் ஜெயலலிதாவை தரக்குறைவாக விமர்சிப்பதா..” என அதிமுகவினர் பொங்கி வருகின்றனர். அண்ணாமலைக்கு எதிராக ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ஆகியோர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த சூழலில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்டச் செயலாளர்கள் பெரும்பாலானோர் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற வேண்டும் என வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசிய அண்ணாமலைக்கு எதிராக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “20 வருடங்களாக ஒரு எம்எல்ஏ கூட இல்லாத பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்களை பெற்றுத் தந்தது அதிமுக தான். பாஜகவின் மிகப்பெரிய தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, பிரதமர் மோடி ஆகியோரே ஜெயலலிதா மீது அதிக மரியாதை வைத்துள்ளார்கள். அப்படி இருக்கும்போது, ஜெயலலிதா குறித்து அண்ணாமலை கூறியுள்ள கருத்து மக்களிடமும், அதிமுகவினரிடமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் நற்பெயரை கெடுக்கும் வகையில் பேசிய அண்ணாமலைக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் இல்லாதவராக அண்ணாமலை இருக்கிறார்” என எடப்பாடி பழனிசாமி பேசினார்.