அதிமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளது பற்றி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஒரே வார்த்தையில் பதில் கூறியுள்ளார். அது பற்றி நாங்கள் எதுவும் கருத்து கூற முடியாது தேசிய தலைமைதான் எந்த முடிவையும் அறிவிக்கும் என்று கூறியுள்ளார் வானதி சீனிவாசன்.
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும், எம்.பியுமான சி.வி.சண்முகம் கூறுகையில், பாஜக கட்சி என்பது வேறு, அண்ணாமலை என்பவர் வேறு. அதிமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம். அதிமுகவை பிடித்து ஏன் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? ஆளுமைமிக்க தலைவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பற்றி கருத்துச் சொல்ல அண்ணாமலைக்கு தகுதி இல்லை. கவுன்சிலராகக் கூட அண்ணாமலை இருந்ததில்லை. ஜெயலலிதாவை பற்றி பேச இந்த முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு எந்தவித யோக்கிதையும் இல்லை என்றும் கூறினார் சி.வி. சண்முகம்.
இந்த கருத்து குறித்து கோவையில் தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், கூட்டணி தொடர்பான விசயங்களில் தேசிய தலைமைதான் முடிவெடுத்து அறிவிக்கும். அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கூறும் கருத்துக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது தேச நலனுக்காக கட்டமைக்கப்பட்டது. எனவே இது குறித்து பேசுவதற்கு தேசிய தலைமை இருக்கிறது. அவர்களின் அறிவுரைப்படி என்ன சொல்கிறார்களோ அதை செய்யத்தான் நாங்கள் இருக்கிறோம் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.