நீட் தேர்வில் தமிழக மாணவர் பிரபஞ்சன் நாட்டிலேயே முதலிடம்!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. நீட் தேர்வில் தமிழ்நாடு மாணவர் பிரபஞ்சன் முதலிடம் பெற்றுள்ளார்.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (NTA) நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (NEET UG) கடந்த மே 7 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. 15 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர். மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக, அங்கு அப்போது நீட் தேர்வு நடைபெறவில்லை. மணிப்பூரில் நீட் தேர்வு ஜூன் 6 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. கலவரம் காரணமாக மணிப்பூர் மாணவர்களுக்கு தேர்வு தள்ளி வைக்கப்பட்டதால் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நீட் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in, ntaresults.nic.in ஆகிய இணையதளங்களில் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 78,693 மாணவர்கள் நீட் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன், ஆந்திராவை சேர்ந்த போரா வருண் சக்ரவர்த்தி இருவரும் 99.9% மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். முதல் பத்து இடங்களில் நால்வர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.