அண்ணாமலையை தவறாகப் பேசுவதை எங்களால் ஏற்க முடியாது: நாராயணன் திருப்பதி!

அண்ணாமலை உண்மைக்கு மாறான விஷயங்களைச் சொல்லவில்லை, அதற்காக அதிமுகவினர் அண்ணாமலையை தவறாகப் பேசுவதை எங்களால் ஏற்க முடியாது என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்துப் பேசியிருந்தார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் ஊழல் காணப்பட்டதாகவும், முன்னாள் முதலமைச்சர்களை குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்ததாகவும் கூறியிருந்தார். ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்து அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டோர் காட்டமாக பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்ணாமலைக்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருவது பற்றியும், அதிமுக மா.செக்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது பற்றியும் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பேசியுள்ளார். அவர் கூறியதாவது:-

அரசியலில் நேர்மையும், நாணயமும் மிக்கவர் அண்ணாமலை. நேர்மையான காவல்துறை அதிகாரியாக இருந்து, லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்டு ஒரு சிறப்பான இளைஞராக, இளம் தலைவராக வலம் வருகிறார் அண்னாமலை. அப்படிப்பட்ட அண்ணாமலையை தவறாக பேசுவதை எங்களால் ஏற்க முடியாது. அரசியலில் முதிர்ச்சி என்பது வயதினாலும், அனுபவத்தினாலும் மட்டும் வருவதல்ல, எண்ணத்தினாலும் முதிர்ச்சி வரும். நல்ல எண்ணமும், நேர்மையான செயல்பாடும் கொண்ட முதிர்ச்சியான தலைவர் அண்ணாமலை. அப்படிப்பட்டவரை முதிர்ச்சியற்ற தலைவர் என்று சொல்வது ஏற்புடையது அல்ல. தனிநபர் தாக்குதல்களை அதிமுகவினர் தவிர்ப்பது நல்லது. அண்ணாமலை கொடுத்த நேர்காணலில் சொன்ன சில வார்த்தைகளை எடுத்துக்கொண்டு அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைப்பது கண்டிக்கத்தக்கது. நடைபெற்ற சம்பவங்களை அண்ணாமலை தெளிவாகச் சொல்லி இருந்தார். உண்மைக்கு மாறான விஷயங்களை அண்ணாமலை சொல்லவில்லை. அவதூறாக எந்தக் கருத்தையும் அவர் சொல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள பாஜக நாராயணன் திருப்பதி, “உண்மை சுடத்தான் செய்யும். சுட்டால் படபடக்கத்தான் செய்யும். படபடத்தால் பதற்றம் ஏற்படத்தான் செய்யும்” எனக் கூறியுள்ளார்.