அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எய்ம்ஸ் மருத்துவக் குழுவை சென்னைக்கு அனுப்பி உயர்தர சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த 2011- 2015 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. 2018 இல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அது போல் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து தன் மீதான நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் விசாரணைக்கு தடை விதித்தது. இதையடுத்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் விசாரணை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று காலை முதல் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூர் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடந்தது. 17 மணி நேர சோதனை முடிந்த நிலையில் நேற்று இரவு செந்தில் பாலாஜியின் கிரீன்வேஸ் சாலையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் அவரை கைது செய்வதாக அதிகாரிகள் கூறினர்.
உடனே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருக்கிறது. அவரது இதயத் துடிப்பு, ஆக்ஸிஜன் அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு 2 அல்லது 3 நாட்கள் சிகிச்சை தேவைப்படுகிறது. ஒரு வேளை இதயத் துடிப்பு சீராக இல்லாவிட்டால் தேவைப்பட்டால் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்தனர். ஆனாலும் செந்தில் பாலாஜி நலமுடன் இருப்பதாக சில திமுக அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து எச் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு உச்சபட்ச சிகிச்சை உறுதிப்பட வேண்டும். எனவே எய்ம்ஸ் குழு சென்னைக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது என் கருத்து என தெரிவித்துள்ளார். அதாவது செந்தில் பாலாஜி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டால் அவர் தொடர்ந்து அமலாக்கத் துறை கட்டுப்பாட்டில் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இதனால் அவரை டிஸ்சார்ஜ் செய்யாமல் அரசு மருத்துவர்கள் 3 நாட்கள் ஆகும் என்கிறார்கள். எனவே டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்து செந்தில் பாலாஜியின் உடலை பரிசோதனை செய்து சான்றளிக்க வேண்டும் என கோரிக்கைகள் எதிர்க்கட்சிகள் தரப்பில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.