அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும், நிலையில் அமலாக்கத்துறை மீது திமுக கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறது. இந்நிலையில், விசாரணை அமைப்புகள் மீது அரசியல் சாயம் பூசுவதா? என்று பாஜகவை சேர்ந்த குஷ்பு கேள்வியெழுப்பியுள்ளார்.
நேற்று காலை அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடத்தினர். சுமார் 17 மணி நேரம் நடைபெற்ற இந்த ரெய்டு இன்று அதிகாலையில் முடிவடைந்தது. இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை காரில் அழைத்து சென்றனர். அப்போதுதான் செந்தில் பாலாஜிக்கு எதிர்பாராத விதமாக நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. அவர் நெஞ்சுவலியில் கதற, அதிகாரிகள் உடனடியாக அவரை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் முடிவில் செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கத்துறையினர் முயன்றார்களா? என்று கேள்வியெழுந்தது. ஆனால் இதற்கு அதிகாரிகள் விளக்கமளிக்கவில்லை.
இந்த விவகாரம் பெரியதாக வெடித்த நிலையில், “விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறிய பிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து – மனிதநேயமற்ற முறையில் பாஜக.,வின் அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது?” என அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கும், பாஜகவுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜகவை சேர்ந்த குஷ்பு, “விசாரணை அமைப்புகள் மீது அரசியல் சாயம் பூசவதா?” என கேள்வியெழுப்பியுள்ளார். இந்த பேட்டியின்போது அவர் கூறியதாவது:-
அமலாக்கத்துறை, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படிதான் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால் மத்திய அரசு மீது பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கும் மத்திய அரசுக்கும் என்ன தொடர்பு? அமலாக்கத்துறை மீது அரசியல் சாயம் பூச முயற்சிகள் நடக்கின்றன. இது கடும் கண்டனத்திற்குரியது.
இப்போது அமலாக்கத்துறை மீது குற்றம்சாட்டுபவர்கள், அவர்களுக்கு சாதகமான நடவடிக்கையை அமலாக்கத்துறை மேற்கொண்டால் அதை பாராட்டுவார்கள். அதே அமலாக்கத்துறையின் நடவடிக்கை இவர்களை பாதித்தால், பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சிக்கின்றனர். இவர்கள் சொல்வதுபோலவே பார்த்தால், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிராக அரசு செயல்படுகிறது என்று சொல்லலாமா? அப்படி சொன்னால் அதை இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
ஊழல் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதையும் தி.மு.க. தலைவர் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதையும் சேர்த்து வலை பின்னுவது ஏன்? மோடி என்ற ஒரு நபரை தோற்கடிக்க இத்தனை பேர் கூட்டு சேர வேண்டி உள்ளது அப்படியானால் பலம் எந்த பக்கம் இருக்கிறது. பலமான தலைவர் யார்? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது வரை பிரதமரை எதிர்த்து போட்டியிட எந்த எதிர்க்கட்சி தலைவரும் முன்வரவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.