அதிமுக பாஜக இடையேயான மோதலை திசை திருப்பும் விதமாக செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடத்தப்படுவதாக திமுகவின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் காலையில் சோதனை மேற்கொண்டனர். தலைமைச்செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறையிலும் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி வந்து அதிகாரிகளிடம் பேசினார். செந்தில் பாலாஜியை சந்திக்க வேண்டும் என்று கேட்டதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ், பாரதி கூறியதாவது:-
தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்து விட்டு போன உடனேயே செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடைபெறுகிறது இதை மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா? முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு அமித்ஷாவிடம் பதில் இல்லை அதற்கு பதிலாக ரெய்டு நடத்தி வருகிறார்கள். 1974ஆம் ஆண்டில் இருந்தே பல ரெய்டுகளை பார்த்திருக்கிறோம். செந்தில் பாலாஜி ஒரு அமைச்சர் அவரை பாதுகாப்போம். திமுக ஆட்சியில் ஊழல் நடந்து உள்ளது போல காட்டுவதற்காக ரெய்டு நடத்துகின்றனர். அதிமுக ஆட்சி காலத்தில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் தற்போது ரெய்டு நடக்கிறது.
கர்நாடகாவில் துணை முதல்வராக இருக்கும் டி.கே. சிவகுமார் வீட்டில் பலமுறை அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது அங்கு என்னவானது? அங்கு ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் டி.கே. சிவக்குமார் வெற்றி பெற்றார். அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே கடந்த இரண்டு நாட்களாக பிரச்சினை நடந்து வருகிறது. அதனை திசை திருப்பும் வகையில் தற்போது அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்த அமலாக்கத்துறை ரெய்டினை சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். இவ்வாறு ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.