கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கிருந்த பயணிகள், பணியாளர்கள் என ஏராளமானோர் பதறியடித்துக்கொண்டு வெளியேறினர்.
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் அமைந்து உள்ளது. இந்தியாவின் மிக முக்கிய விமான நிலையமாக உள்ள இங்கு நாளொன்று நூற்றுக்கணக்கான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாளொன்று உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் என பல்லாயிரக்கணக்கானோர் இதன் மூலம் பயணித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இந்த விமான நிலையத்தில் இரவு 9 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தின் டி போர்டில் உள்ள பற்றி எரிந்த இந்த தீயால் பயணிகளும் விமான நிலைய பணியாளர்களும் பதறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினார்கள். உடனே தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்தன. அறை மணி நேர போராட்டத்துக்கு பின் தீ கட்டுப்படுத்தப்பட்டது.
தீ விபத்தை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அப்பகுதியில் நடைபெற்று உடமைகள் மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டு ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் பணிகள் தொடங்கின. இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியது. விமானத்தில் புறப்படுவதற்காக 3சி டிப்பார்சர் வாயிலில் ஏராளமான பயணிகள் நின்றுகொண்டு இருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், “பயணிகள் வேகமாக வெளியேறியதால் விமான நிலைய அதிகாரிகளால் கட்டுப்படுத்துவது கடினமானது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு துறையை விமான நிலைய அதிகாரிகள் பயன்படுத்தினார்கள். தீ விபத்து ஏற்பட்ட இடத்தை குளிர்ச்சியூட்டும் பணிகளும் நடைபெற்றன.” என்றனர். இந்த தீ விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் மின்கசிவின் காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கொல்கத்தா விமான நிலைய நிர்வாகம் டுவிட்டரில் விளக்கமளித்து உள்ளதாவது, “விமான நிலையத்தின் டி போர்டலில் இரவு 9.12 மணியளவில் சிறிய தீ விபத்தும், புகை மூட்டமும் ஏற்பட்டது. இரவு 9.40 மணியளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டது. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதிகளவிலான புகை இருந்ததால் உடமைகள் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இரவு 10.15 மணியளவில் தொடங்கப்பட்டது” என்று குறிப்பிட்டு உள்ளது.