தமிழக நிதியமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுவுக்கு செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத் துறையும் வீட்டு வசதி துறை அமைச்சராக உள்ள முத்துசாமிக்கு மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறையும் ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
போக்குவரத்து துறை அமைச்சராக அதிமுக ஆட்சியில் இருந்த செந்தில் பாலாஜி அதே துறையில் வேலை வாங்கித் தருவதாக 81 பேரிடம் பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவும் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் அமலாக்கத் துறை நேற்று முன் தினம் செந்தில் பாலாஜியின் வீட்டில் ரெய்டு நடத்தியது. அது போல் தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. பின்பு நேற்று மாலை சென்னை பசுமை வழிச்சாலையில் அவருடைய வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அவரை கைது செய்வதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறினார். உடனே அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு ஆஞ்சியோ கிராம் செய்ததில் செந்தில் பாலாஜி இதயத்தில் உள்ள ரத்தக் குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக அறிக்கை வந்துள்ளது. இதனால் அவருக்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவமனை பரிந்துரைத்துள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்த நீதிபதி அல்லி, அவருக்கு 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிமன்றக் காவலில் இருப்பதால் அவருக்கு புழல் சிறைத் துறையினர் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது தொடர்பான மனு உள்பட 3 மனுக்கள் மீது இன்று விசாரணை நடத்தப்படுகிறது. ஒன்று செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது குறித்த வழக்கு, மற்றொன்று அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்த வழக்குகளை செந்தில் பாலாஜி தரப்பில் தொடரப்பட்டுள்ளன. 3-ஆவது வழக்கு அமலாக்கத் துறையினர் சார்பில் தொடரப்பட்டது. அதில் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பது என 3 முக்கிய மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. இந்த முக்கிய துறைகள் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சரவை மாற்றம் குறித்து பரிந்துரை செய்துள்ளார். அதில் மின்சாரத் துறை தங்கம் தென்னரசுவுக்கும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளார். மேலும் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக அமைச்சரவையில் தொடர்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.