அப்படியென்ன செந்தில் பாலாஜி மீது முதல்வருக்கு பாசம்?: நாராயணன் திருப்பதி!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை மேற்கொண்ட கைது நடவடிக்கையை கண்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ வெளியிட்ட நிலையில், அதுதொடர்பாக பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு அதிரடியாக கைது செய்தனர். முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்த பணமோசடி வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்படவே, அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு இதய அறுவைச சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இந்த சூழலில், முதல்வர் ஸ்டாலின் இன்று மதியம் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், “அதிமுகவை போல பிற கட்சிகளையும் மிரட்டி பணிய வைத்து விடலாம் என பாஜக நினைக்கிறது. ஆனால், பாஜக நினைப்பதை போன்ற கட்சி அல்ல திமுக. உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படுபவர்கள் இல்லை. சுவரில் அடித்த பந்து திரும்ப வந்து முகத்தில் அடிக்கிற மாதிரிதான் திமுககாரன் வளர்க்கப்பட்டிருக்கிறான்” என எச்சரிக்கை விடுக்கும் தொனியில் ஸ்டாலின் பேசியிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வரும் நிலையில், பாஜகவினர் இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். அந்த வகையில், பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

திமுககாரர்களை சீண்டி பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல. எச்சரிக்கை. செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை, அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடந்த மே 16-ம் தேதியன்று, செந்தில் பாலாஜி மீது புதிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க சொன்னது உச்ச நீதிமன்றம். மேலும், இதில் ஏதாவது தவறு ஏற்படுமேயாயின் உச்ச நீதிமன்றமே ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கும் என்றும் குறிப்பிட்டது. மேலும், அமலாக்கத்துறை தன் விசாரணையை தொடரலாம் என்றும், அரசுப் பணியில் இருப்பவர்கள் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்த குற்றச்சாட்டு எப்போது வெளியில் வந்துவிட்டதோ, அதுகுறித்து முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிய வேண்டியது அமலாக்கத்துறையின் கடமை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்படியென்றால் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இப்போது யாரை எதிர்க்கிறார்? உச்ச நீதிமன்றத்தையா? யாருக்கு எச்சரிக்கை விடுக்கிறார் ஸ்டாலின்? உச்ச நீதிமன்றத்திற்கா? இதய நோயை எப்படி ஒரே நாளில் உருவாக்க முடியும்? நடவடிக்கை எடுக்க சொன்னது உச்ச நீதிமன்றம் என்று தெரிந்திருந்தும் அநியாயமாக தொல்லை கொடுக்கப்படுகிறது என்றெல்லாம் ஸ்டாலின் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. உச்ச நீதிமன்றத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு, அப்படியென்ன செந்தில் பாலாஜி மீது முதல்வருக்கு பாசம்?. இவ்வாறு நாராயணன் திருப்பதி கேள்வியெழுப்பியுள்ளார்.