அமைச்சரவையில் யார் இருக்கவேண்டும் என முடிவு செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை: கனிமொழி!

அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை முடிவு செய்யும்அதிகாரம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இல்லை என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

திமுக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு அரசு எடுக்கும் தீர்மானங்களுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக ஆளுநர் செயல்படுவதாக திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. தமிழ்நாடு அரசின் ஆட்சி அதிகாரத்திலும், கொள்கை முடிவுகளிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி தலையிடுவதாகவும் புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. ஆளுநருக்கு எதிராகவே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி தங்கள் எதிர்ப்பை பகிரங்கமாக வெளிப்படுத்தியது திமுக.

இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்களின் இலாக்காக்களை மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு நேற்று பரிந்துரைக் கடிதம் அனுப்பினார். ஆனால் முதலமைச்சரின் கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பினார். இதனால் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு அவசர ஆலோசனை நடத்தி, மீண்டும் ஆளுநருக்கு இலாகா மாற்றம் குறித்த பரிந்துரை கடிதத்தை அனுப்பினார்.

இந்நிலையில், ஆளுநரின் இந்த செயலை கண்டித்துள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி. கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மட்டுமே முடிவு செய்ய முடியும். ஆளுநராக இருக்கும் ரவி அவர்களுக்கு அதை முடிவு செய்யும் எந்த அதிகாரமுமில்லை. அரசமைப்பு சட்டத்தை ஆளுநர் மதிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.