தனது தங்கை கனிமொழி கைது செய்யப்பட்ட போது கூட பதறாத ஸ்டாலின், செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் ஏன் பதறுகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று ஒரு காணொலியை வெளியிட்டிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பதிலுக்கு இன்றொரு காணொலியை வெளியிட்டுள்ளார். அதில் அதிமுக யாருக்கும் அடிமையில்லை என பாஜகவுக்கும் சூசகமாக ஒரு மெசேஜ் ஒன்றை கூறியிருக்கிறார். எதுவுமே தெரியாத ஒரு முதலமைச்சர் தமிழகத்தை ஆள்வதாகவும் ஸ்டாலினை பொம்மை முதலமைச்சர் எனவும் விமர்சித்துள்ள எடப்பாடி, செந்தில்பாலாஜி எங்கே தனது குடும்பத்தினரை பற்றி அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் சொல்லிவிடுவாரோ என்ற பதற்றத்தில் தான் முதல்வர் அவரை பார்க்கச் சென்றதாக கூறியிருக்கிறார்.
ஆ.ராசா, கனிமொழி போன்றோர் கைது செய்யப்பட்ட போது திமுக இப்படி ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என்றும் சொந்த சகோதரியை கூட திகார் சிறையில் சென்று பார்க்காதவர் ஸ்டாலின் எனவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். இந்நிலையில் செந்தில்பாலாஜி கைது என கேள்விபட்டவுடன் ஸ்டாலினிடம் இவ்வளவு பதற்றம் ஏன் என்ற கேள்வியை தனது வீடியோவில் எழுப்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
டாஸ்மாக் பார்கள் சட்டவிரோதமாக நடந்து வருவதாக குற்றஞ்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, கடந்த 2 ஆண்டுகளில் தமிழகம் எந்த வளர்ச்சியும் அடையவில்லை என்றும் ஊழலில் மட்டுமே வளர்ச்சி நடந்துள்ளது எனவும் விமர்சித்திருக்கிறார். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் மீது குற்றஞ்சுமத்த வேண்டும் என்றால் முதலில் முழுமையான தகவல்களோடு குற்றஞ்சுமத்த வேண்டும் என ஸ்டாலினை அவர் கேட்டுக்கொண்டார். போக்கில் தனது வீடியோ பதிவின் மூலம் பாஜகவுக்கும் ஒரு மெசேஜை கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதாவது, அதிமுக யாருக்கும் அடிமையில்லை எனவும் அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போவார்கள் என்றும் காற்றோடு காற்றாக கலந்து போவார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்.