டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்களை உயர்த்தி கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கொரோனா கொடுந்தொற்று காரணமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் 2019ம் ஆண்டுக்குப் பிறகு நடத்த முடியவில்லை. இந்நிலையில், மூன்றாண்டுகள் கழித்து, 24.07.2022 அன்று இதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, 24.03.2023 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதற்கான காலிப் பணி இடங்கள் 10,117 என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மூன்றாண்டுகள் தேர்வுகள் நடத்தப்படாத நிலையை கவனத்தில் கொண்டு, பறிபோன 30,000 பேருக்கான வேலைவாய்ப்புகளையும் இணைத்து, அவைகளுக்கான தேர்வையும், கலந்தாய்வையும் இந்த ஆண்டிலேயே நடத்தி அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி, வேலை கிட்டாத இளைஞர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைக்குமாறு தமிழக அரசை மறுமலர்ச்சி திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.