2 ஆண்டு திராவிட ஆட்சியில் வடிகால் வாரியத்தின் செயல்பாடு இதுதானா? என சென்னை மழை பாதிப்பு குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் 10 மணிநேரத்துக்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமித்திற்குள்ளாகியுள்ளனர். இதையடுத்து தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் 2 ஆண்டு திராவிட ஆட்சியில் வடிகால் வாரியத்தின் செயல்பாடு இதுதானா? என சென்னை மழை பாதிப்பு குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு நாள் மழைக்கே தண்ணீர் தேங்கி நிற்கும் சாலைகள், நீரில் மூழ்கிய வாகனங்கள், அஸ்தமித்த தலைநகரம். இரண்டு ஆண்டு திராவிட ஆட்சியில் வடிகால் வாரியத்தின் செயல்பாடு இது தானா? விடியல் ஆட்சி என பெருமை பேசும் முதல்வர் பதில் சொல்வாரா? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.