இலாகா இல்லாத அமைச்சர்: அரசாணையை எதிர்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்கு!

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை நியமித்த தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2011-16 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக செந்தில் பாலாஜி மீது புகார் எழுந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரும் எழுந்த நிலையில், அமலாக்கத் துறை வழக்குப்பதிந்து ஆதாரங்களைத் திரட்டியது. இந்நிலையில், கடந்த ஜூன் 13ஆம் தேதி செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் வீடுகளில் சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத் துறை அன்று இரவே அவரைக் கைது செய்தது. அதைத்தொடர்ந்து, நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில்பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துச்சாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. மின்சாரத்துறை தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை முத்துச்சாமி வசமும் ஒப்படைக்கப்பட்டன. செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் முதலில் அனுமதி மறுத்த நிலையில், மீண்டும் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. அதோடு இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிப்பார் என கடந்த 16ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “அமைச்சராக ஒருவரை நியமிப்பது ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரம். நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதிக்காதது சரியானது. ஜாமீன் கோரி நீதிமன்ற காவலில் உள்ள செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில், அவரால் அமைச்சரவை கூட்டங்களிலும் கலந்து கொள்ள முடியாத நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது சட்ட விரோதமானது. நீதிமன்றக் காவலில் உள்ளவர் அமைச்சரவையில் நீடிக்கலாமா? கூடாதா? என்பது குறித்து நீதிமன்ற தீர்ப்புகள் எதுவும் இல்லை. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க அனுமதிப்பது ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு விரோதமானது. எனவே, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்ற அரசாணையை திரும்பப்பெற உத்தரவிட வேண்டும். அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என்று தனது மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.