கின்னஸ் சாதனை படைத்த பிரதமர் மோடியின் யோகா நிகழ்ச்சி!

சர்வதேச யோகா தினத்தையொட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா தலைமையகத்தின் வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த பிரமாண்டமான யோகா நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்து அசத்தியது.

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று நியூயார்க்கை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடியை, டுவிட்டர் உரிமையாளரான எலான் மஸ்க் சந்தித்து பேசினார். இதையடுத்து சர்வதேச யோகா தினத்தையொட்டி நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியி்ல ஐநா பொது சபை தலைவர் சாபா கோரோசி, நடிகர் ரிச்சர்ட் கெரே, நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.

ஐநா தலைமையகத்தின் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி யோகா செய்து அசத்தினார். இதில் அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், டாக்டர்கள், யோகா ஆசிரியர்கள் உள்பட பல்துறை கலைஞர்கள் பங்கேற்று யோகா செய்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொத்தம் 180 நாடுகளை சேர்ந்தவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தனர். இதன்மூலம் பிரதமர் மோடி தலைமையில் நடந்த யோகா நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்தது. அதாவது ஐநா தலைமையகத்தில் ஒரே நேரத்தில் 180 நாடுகளை சேர்ந்தவர்கள் யோகா செய்தது தான் சாதனையாக மாறியுள்ளது. அதன்படி ஐநா தலைமையக வளாகத்தில் ‘அதிக நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி’ என்ற அடிப்படையில் கின்னஸ் சாதனையாக இது அமைந்தது. இதற்கான சான்றிதழ் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கப்பட்டது.