டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் 5 பேரும் உயிரிழப்பு!

அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்க்க சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் மாயமானது. அதை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்ற நிலையில், அழுத்த மாறுபாட்டால் வெடித்து சிதறியுள்ளது தெரியவந்துள்ளது. கப்பலில் பயணித்த 5 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு கடந்த 1912 ஆம் ஆண்டு புறப்பட்ட டைட்டானிக் கப்பல் செல்லும் வழியில் பனிப்பாறை மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த பயங்கர விபத்தில் சுமார் 1,500 பேர் கொல்லப்பட்டனர். கடலில் மூழ்கிய இந்த கப்பல் அமெரிக்காவின் நியூ ஃபெளண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் கிடந்ததை 1985 ஆம் ஆண்டு கண்டறிந்தனர். இதையடுத்து, இந்த கப்பலை கடல் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் அவ்வப்போது ஆழ்கடலுக்கு சென்று ஆய்வு செய்து வந்தனர். இந்த உடைந்த டைட்டானிக் கப்பலை சுற்றுலாப்பயணிகளும் நீர்மூழ்கி கப்பலில் சென்று பார்க்கும் வகையிலான வசதியை ‛தி ஓசன் கேட்’ என்ற நிறுவனம் ஏற்படுத்தி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நிறுவனத்தின் ‛டைட்டன்’ என்ற பெயர் கொண்ட நீர்மூழ்கி கப்பல் 5 பேருடன் பயணத்தை தொடங்கியது. கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க ‛டைட்டன்’ நீர்மூழ்கி கப்பலில் பிரிட்டன் தொழிலதிபர்களான ஹமிஷ் ஹார்டிங் (வயது 58), ஷாஜதா தாவூத் (48) அவரது மகன் சுலைமான் (19), பிரஞ்ச் ஆய்வாளர் பால் ஹென்றி நர்கோலெட் (77) உள்பட 5 பேர் சென்றனர். இந்த நீர்மூழ்கி கப்பல் தனது பயணத்தை தொடங்கிய 2 மணிநேரத்தில் தொடர்பை இழந்தது. அவசர காலத்தில் தப்பிப்பதற்காக 96 மணி நேரம் மட்டுமே தாக்கு பிடிக்கும் அளவுக்கு ஆக்சிஜன் அந்த நீர்மூழ்கி கலத்தில் இருந்தது. இதனால், முழு வீச்சில் தேடுதல் பணிகள் நடைபெற்று வந்தது.

கப்பலை தேடும் பணியில் அமெரிக்க கடலோர காவல் படை ஈடுபட்டது. நீர் மூழ்கி கப்பலில் உள்ள ஆக்சிஜன் தற்போது காலியாகி உள்ளது. இதனால் உள்ளே இருக்கும் 5 உயிர்களுக்கு என்ன ஆனது என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில், நீர் மூழ்கி கப்பலின் அழுத்த அறை வெடித்து சிதறியுள்ளது. நீர் மூழ்கி கப்பலின் சேதம் அடைந்த பாகங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், கப்பலில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்தனர். டைட்டானிக் கப்பலை சுற்றியுள்ள குப்பைகளுக்கு மத்தியில் ஐந்து பாகங்களாக நீர்மூழ்கி சிதைந்து கிடப்பதாக அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் எப்போதாவது மீட்கப்படுமா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளது.