கிரீஸ் நாட்டில் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, தான் அதிபராக இருந்த காலத்தில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பேசியுள்ளார்.
ஏதென்ஸில் ஆபிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த தலைவர்களை ஒபாமா சந்தித்து வருகிறார். அதேபோல முன்னாள் ஜனாதிபதிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறார். இதற்காக ஒரு வார காலத்தை ஒபாமா ஏதென்ஸில் செலவிட்டு வருகிறார். இந்நிலையில் தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், தான் அதிபராக இருந்த காலத்தில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பேசியுள்ளார். அதாவது, “நான் அமெரிக்க அதிபராக இருந்த போது எதிர்கொண்ட சிக்கலான பல தருணங்களில் ஒன்று ஜனநாயக விரோத தலைவர்கள் மற்றும் சர்வாதிகளுடனான சந்திப்பதாகும். அதிபர் எனும் பொறுப்பு அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்ததுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் தோழமையாக இருக்கும் சக்திகள் தனிப்பட்ட முறையில் எனக்கு அழுத்தங்களை கொடுக்கும். அதேபோல வெளியிலும் இது போன்று சிக்கல்கள் இருக்கும்.
சீனாவை எடுத்துக்கொண்டால் நாங்கள் அவர்களுடன் வணிகம் செய்ய வேண்டியிருந்தது. இதில் ஏராளமான பொருளாதார நலன்கள் இருக்கின்றன. இப்படியான தருணங்களில் அமெரிக்காவின் அதிபராக இருப்பவர்கள் ஏற்கெனவே வழக்கத்தில் இருக்கும் கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும். அல்லது ஒத்துவராத விஷயங்களை எதிர்க்க வேண்டும். இதுவும் அதிபராக இருந்த காலத்தில் நான் எதிர்கொண்ட சவாலாகும். எங்கு எதை ஏற்க வேண்டும், எங்கு எதை எதிர்க்க வேண்டும் என்கிற புரிதல் அவசியமாகும். என்னை பொறுத்த அளவில் நான் குறிப்பிட்ட நடைமுறைகளை பற்றிதான் கவலைப்படுவேனே தவிர, அதன் மீதிருக்கும் கருத்துகளை பற்றி அல்ல. தற்போது அமெரிக்கா மட்டுமல்லாது உலக நாடுகளின் ஜனநாயகங்களும் பலவீனமடைந்துள்ளன. கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்க வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல், அமெரிக்கா எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்” என்று கூறியுள்ளார்.