ரஷ்ய ராணுவத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வாக்னர் குழு கிளர்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. ரோஸ்டோவ் நகரில் ராணுவ படைகள் தனது கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டதாக வாக்னர் குழு தெரிவித்தது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. ரஷ்யாவால் உக்ரைனை சுலபமாக வெற்றி கொள்ள இயலவில்லை. போர் முடிவுக்கு வராமல் 15 மாதங்களுக்கும் மேலான நிலையில் தற்போது ரஷ்யா புது சிக்கலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோசின், ரஷ்ய நாட்டிற்கான தனியார் ராணுவ கூலிப்படை தலைவராக உக்ரைனுக்கு எதிராக, அவரது படையும் போரில் ஈடுபட்டு வந்தது. இதற்கிடையே, ரஷ்ய ராணுவத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு பெரும் கிளர்ச்சிக்கு பிரிகோசின் அழைப்பு விடுத்திருக்கிறார். தற்போது ரஷ்யாவின் தெற்கில் உள்ள ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரில் உள்ள ரஷ்ய ராணுவ படைகள், தனது கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டதாக அவர் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் அறிவித்திருக்கும் ஆயுதமேந்திய கிளர்ச்சியிலிருந்து நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாப்போம். இந்தக் கலகம் எங்களுக்கு ஒரு கொடிய அச்சுறுத்தல். இதற்கு பதிலளிக்கும் விதமாக கடினமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கிளர்ச்சிக்கு காரணமானவர்கள் அனைவரும் தவிர்க்க முடியாத தண்டனையை அனுபவிப்பார்கள். ஆயுதப்படைகள் மற்றும் பிற அரசு நிறுவனங்களுக்கு தேவையான உத்தரவுகள் கிடைத்துள்ளன. இதுபோன்ற குற்றச் செயல்களில் பங்கேற்பதை நிறுத்துங்கள். மேற்கத்திய நாடுகளின் முழு ராணுவ, பொருளாதார மற்றும் தகவல் இயந்திரம் ரஷ்யாவிற்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. இந்தப் போரில் நமது மக்களின் தலைவிதி தீர்மானிக்கப்படும்போது, அனைத்து சக்திகளின் ஒருங்கிணைப்பு, ஒற்றுமை, பொறுப்பு ஆகியவை தேவை. ரஷ்யா உக்ரைனில் தன் எதிர்காலத்திற்கான மிகக் கடினமான போரில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் கிளர்ச்சி என்பது கண்டிக்கத்தக்கதாகும். இதுபோன்ற நேரத்தில் ஆயுதமேந்திய கிளர்ச்சி என்பது ரஷ்யாவிற்கும், அதன் மக்களுக்கும் ஒரு அடி. ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு சதி செய்து ஏற்பாடு செய்தவர்கள், தனது தோழர்களுக்கு எதிராக ஆயுதங்களை உயர்த்தியவர்கள், ரஷ்யாவைக் காட்டிக் கொடுத்துள்ளனர். அதற்கு அவர்கள் பதிலளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் ராணுவ தலைமையகத்தில் இருந்தபடி வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் வீடியோ வெளியிட்டிருக்கிறார். வாக்னர் படைகள் ரஷ்யாவின் முக்கிய நகரங்களை நோக்கி புறப்பட்டுச் செல்வதால், ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் சண்டையிட்டு வந்த ரஷ்ய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு, ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக திரும்பியிருக்கிறது. ரஷ்ய ராணுவ மந்திரியை நீக்க வலியுறுத்தி இந்த கிளர்ச்சியை ஆரம்பித்துள்ளனர். நாட்டின் ராணுவ தலைமையை கவிழ்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளதாக வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தெரிவித்துள்ளார். இதையடுத்து வாக்னர் கூலிப்படைகள் ரஷ்யா நோக்கி புறப்பட்டுச் செல்கின்றன. வாக்னர் படைகள் ரோஸ்டோன் நகரில் உள்ள ராணுவ தலைமையகத்தை கைப்பற்றிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ தலைமையகத்தில் இருந்தபடி வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், அவர் தனது படைகள் விமானத் தளம் உட்பட நகரத்தில் ராணுவ நிலைகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாக கூறி உள்ளார். நகரின் முக்கிய தெருக்களில் டாங்கிகள் உட்பட ராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதையும், வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதையும் உறுதி செய்யும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. வாக்னர் கூலிப்படையினர் ரஷ்யாவின் முக்கிய நகரங்களை நோக்கி புறப்பட்டுச் செல்வதால், மாஸ்கோவின் முக்கிய பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாஸ்கோவில் இரு படைகளும் நெருங்கும் சமயத்தில் மோதல் வெடிக்கலாம்.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் அரசு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய சில நிமிடங்களிலேயே வாக்னர் குழு தனது டெலிகிராம் பக்கத்தில் ஒரு பதிலடியைப் பதிவிட்டுள்ளது. அதில், ‘ரஷ்ய அதிபர் தவறான முடிவை எடுத்துள்ளார். விரைவில் ரஷ்யாவுக்கு புதிய அதிபர் கிடைப்பார்’ என்று பதிவிட்டுள்ளது,
முன்னதாக தொலைக்காட்சி உரையில் பேசிய அதிபர் புதின், “வாக்னர் ஆயுதக் குழு முதுகில் குத்திவிட்டது. இது அப்பட்டமான துரோகம். நாட்டைக் காக்க போராடிக் கொண்டிருக்கும்போது தனிநபர் விருப்பங்களுக்காக ஆயுதம் ஏந்துவது தேசத் துரோகக் குற்றம். இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டும். கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைமையை பின்பற்றாமல் வீரர்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். மேலும், ‘தி வாக்னர்’ குழு ஒரு தீவிரவாதக் குழு என்றும் புதின் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
முன்னதாக, இன்று காலை ‘தி வாக்னர்’ குழு தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஸின் வெளியிட்ட ஆடியோ பதிவில், “நாங்கள் 25,000 பேர் இருக்கிறோம். ரஷ்யாவின் ராணுவத் தலைமையை எதிர்த்து முன்னேறுகிறோம். வழியில் எது தடையாக இருந்தாலும் எங்கள் பாணியில் துவம்சம் செய்வோம்” என்று எச்சரித்திருந்தார். ஏற்கெனவே உக்ரைன் போர் காரணமாக நெருக்கடியில் உள்ள ரஷ்யாவுக்கு இது இன்னொரு அழுத்தமாக சேர்ந்து கொள்ள உலகமே இந்த திருப்பத்தை உற்று நோக்கி வருகிறது.
தொடர்ந்து டெலிகிராமில் ஒரு ஆடியோவை வெளியிட்ட பிரிகோசின், “தாய்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கூறுகிறார் அதிபர் புதின். அது ஓர் ஆழமான தவறு. நாங்கள் தாய்நாட்டின் பாதுகாவலர்கள். புதினின் வேண்டுகோளை எனது படை வீரர்கள் கேட்க மாட்டார்கள். ஏனெனில், எங்களுக்கு எங்களின் தேசம் ஊழல், சதி மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் சிக்கியிருப்பதில் விருப்பமில்லை” என்று கூறியுள்ளார்.
ரஷ்ய அதிபர் புதினுக்கு புதிய நெருக்கடி தரும் வாக்னர் ஆயுதக் குழுவின் பின்புலம் ஒரு தசமத்துக்கும் குறைவானதாகத் தான் இருக்கிறது. வாக்னர் ஆயுதக் குழு என்பது ரஷ்யாவில் இயங்கிவரும் தனியார் ராணுவ ஒப்பந்த அமைப்பாகும். இது ஒருவித கூலிப்படை என்றும் கூறலாம். ஏனெனில், ரஷ்யா மட்டுமல்லாது லிபியா, மாலி, சிரியா எனப் பல பகுதிகளிலும் உள்நாட்டுப் போரில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசாங்கத்துக்கு ஆதரவாக இந்தக் குழுவினர் இயங்குகின்றனர். ஆனால், உலகம் முழுவதும் இந்தக் குழு சட்டத்துக்கு அப்பாற்பட்டே செயல்படுகிறது. ரஷ்யாவிலும் தனியார் ராணுவ ஒப்பந்தக்காரர்கள் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மறைமுகமாக அதிபர் புதினின் ஆதரவோடு, ராணுவத்தின் சம்மதத்தோடு தேவைப்படும்போது இந்தக் குழு இயக்கிக் கொள்ளப்படுகிறது. வாக்னர் ஆயுதக் குழு உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ராணுவத் தாக்குதலின்போது பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. குறிப்பாக, கிழக்கு உக்ரைனின் பக்முத் பகுதி கைப்பற்றப்பட்டதில் வாக்னர் ஆயுதக் குழுவின் செயல்பாடுகளுக்கு அதிபர் புதினே பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிமிட்ரி உக்டின் என்ற முன்னாள் ரஷ்ய அதிகாரி மற்றும் யெவ்ஜின் பிரிகோசின் என்ற புதினின் முன்னாள் தலைமை சமையல் நிபுணரும் இணைந்து 2014-ல் இந்தப் படையை உருவாக்கினர். இதில் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள், சிறை சென்று திரும்பியவர்கள் உண்டு. ஏன் தண்டனையிலிருந்து தப்பிக்க நினைப்பவர்கள் கூட ‘தி வாக்னர்’ குழுவில் இணைந்து தப்பித்துக் கொள்வதுண்டு. ஒரு மூர்க்கத்தனமான ஆயுதக் குழு. பக்முத்தில் வாக்னர் குழுவை இறக்கி தங்கள் படைகளுக்கு பெரும் சேதத்தை ரஷ்யா ஏற்படுத்தியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டி இருந்தது.
இவ்வாறாக இவர்களின் படைகள் உக்ரைன் மீதான தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இப்போது நடக்கும் போர் தொடங்குவதற்கு முன்னரே 2014 தொட்டு உக்ரைனில் அவ்வப்போது சிறு தாக்குதல்களை இவர்கள் நடத்தினர். குறிப்பாக, கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் போரில் ‘தி வாக்னர்’ ஆயுதக் குழு பெரும் பங்காற்றியது. 2015-ல் தொடங்கி இந்த ஆயுதக் குழு சிரியா, லிபியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் உள்நாட்டுக் கிளர்ச்சிகளில் அரசுக்கு ஆதரவாகப் பணியாற்றியுள்ளது. அதேபோல் சிரியாவின் தங்கச் சுரங்கங்களைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அதிபர் புதினின் ஆதரவோடு வளர்க்கப்பட்ட வாக்னர் குழு இன்று அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது. அதன் பின்னணி என்னவென்று பார்த்தால், இந்த ஆயுதக் குழுவுக்கும் ரஷ்ய ராணுவத் தலைமைக்கும் இடையேயான அதிகார மோதல். உக்ரைன் போரின்போது வீரர்களுக்குத் தேவையான ஆயுதங்கள், தளவாடங்களைக் கொடுப்பதில் ரஷ்ய ராணுவம் தாமதம் செய்து வீரர்கள் உயிரிழக்கக் காரணமாக இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே வாக்னர் குழு குற்றம்சாட்டி வந்தது.
கடந்த ஜூன் மாதம் முதல் தி வாக்னர் குழுவுக்கு ரஷ்ய ராணுவ அமைச்சகம் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கியது. அந்தக் குழுவில் சேரும் வீரர்கள் ராணுவ ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை தொடங்கி பல கெடுபிடிகளை அடுக்கியது. ஆனால், இதற்கு பிரிகோசின் எதிர்ப்பு தெரிவிக்கலானார். அல்கொய்தா போன்ற ஆயுதக் குழுக்கள் வளர்த்துவிட்டவர்களுக்கே நெருக்கடியான கதையை இந்த உலக வரலாற்றில் உள்ளது. அப்படித்தான் இந்த வாக்னர் ஆயுதக் குழுவும் இன்று புதினுக்கு புதிய நெருக்கடியாக உருவாகியுள்ளது என்று கூறப்படுகிறது.
ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக நடந்து வரும் உள்நாட்டு போர் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைனில் எத்தனை நாள் படைகளை வைத்துள்ளதோ அவ்வளவு பெரிய பிரச்னை ரஷ்யாவுக்கு ஏற்படும். ரஷ்யாவின் பலவீனம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்திருக்கிறார்.