பயத்தின் காரணமாக விசாரணை அமைப்புகளை மத்திய அரசு ஏவி விடுவதாக ஆதித்ய தாக்கரே கூறினார்.
கொரோனா சமயத்தில் அமைக்கப்பட்ட ஜம்போ கொரோனா சிகிச்சை மையங்களில் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் முன்னாள் மந்திரி ஆத்திய தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் எம்.பி. ஆகியோருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் தீவிர சோதனை நடத்தியது.மும்பை பைகுல்லாவில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே நிருபர்களிடம் கூறியதாவது:-
எனக்கு நெருக்கமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முக்கியமான காரணம், மும்பை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழலுக்கு எதிராக உத்தவ் பாலாசாகேப் கட்சி சார்பில் வருகிற ஜூலை 1-ந் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டது தான். தற்போது ஆட்சியில் உள்ள அரசு மிகவும் பயந்து மத்திய விசாரணை அமைப்புகளை ஏவி விட்டு கோழைகளை போல சண்டையிடுகின்றனர். நீங்கள் எங்களுடன் சண்டையிட வேண்டும் என்று விரும்பினால் நாங்கள் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்கு நீங்கள் போராட்ட களத்திற்கு வர வேண்டும். நமது மாநிலத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதை நமது நாடு மற்றும் உலக நாடுகள் பார்த்துக்கொண்டு இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.