ரஷ்யாவுக்கு எதிராக கலகம் செய்தவர்களை எளிதில் விட்டு விட மாட்டேன் என பேசிய புதின், தற்போது முடிவில் இருந்து இறங்கி வந்து உடன்படிக்கைகளை ஏற்றுக்கொண்டது அவரது தோல்வியை காட்டுவதாகவே புதின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர்.
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, அந்த நாடு மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் ஓராண்டு கடந்து நீடித்துக் கொண்டு இருக்கிறது. சிறிய நாடான உக்ரைனை ஒரு கை பார்த்துவிடலாம் என்ற மமதையில் சென்ற ரஷ்யாவுக்கு நினைத்தது ஒன்று நடப்பது வேறு ஒன்று ஆகிவிட்டது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் ஆதரவுடன் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் வலுவாக சண்டையிட்டது. இதனால், ரஷ்யாவின் எண்ணம் தற்போது வரை ஈடேறவில்லை. இதற்கு மத்தியில் ரஷ்யா, உக்ரைனுக்கு எதிரான போரில் வாக்னர் என்ற தனியார் குழுவையும் போரில் பயன்படுத்தி வந்தது. இந்த குழுவை பொறுத்தவரை இது கூலிப்படை போல பணத்தை பெற்றுக்கொண்டு தாக்குதல் நடத்தும் ஒரு அமைப்பு ஆகும்.
உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்துக்கு உதவியாக தாக்குதல் நடத்தி வந்த இந்த குழு ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பியது. உக்ரைன் போரில் ரஷ்யா தங்களுக்கு சரியான ஆயுதங்களை வழங்கவில்லை எனவும், தங்களது அமைப்பை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேரை ரஷ்ய ராணுவம் கொன்றுள்ளதாகவும் வாக்னர் குழு குற்றம்சாட்டி கலகத்தை தொடங்கியது. ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்குவை வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோசி கடுமையாக விமர்சித்து வந்தார். தொடர்ந்து ரஷ்யாவின் ராணுவ தலைமையை மாற்றுவோம் என்ற அரைகூவலுடன் மாஸ்கோ நோக்கி செல்லவும் திட்டமிட்டது. எனினும் ரஷ்ய அதிபர் புதின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, வாக்னர் படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜினுடன் இடைக்கால உடன்படிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து மாஸ்கோ நோக்கி செல்லும் முடிவை வாக்னர் குழு கைவிட்டது.
பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாடுகளின்படி, வாக்னர் படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினுக்கு எதிரான ரஷ்ய பாதுகாப்புத்துறை பதிவு செய்த கிரிமினல் வழக்குகள் அனைத்தும் கைவிடப்படும் என்று அவர் கைதை தவிர்க்க பெலராஸ் செல்லலாம் எனவும் ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், பிரிகோஜினுக்கு எதிரான வழக்குகள் அனைத்து கைவிடப்படும். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்துடன் வாக்னர் வீரர்கள் ஒப்பந்தம் கையெழுத்திடலாம். அவர்களுக்கு எதிராக லீகல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாது. அவர்களின் பணி எப்போது மதிக்கப்படும் என்றார்.
பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதுன், தனியார் இராணுவ நிறுவனமான வாக்னருடன் தெற்கு ரஷ்யாவின் நிலைமை குறித்து எங்களது பெலாரஸ் பிரதிநிதிக்கு விளக்கினார். அனைவரும் இந்த கூட்டு நடவடிக்கைகளுக்கு ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ரஷ்யாயாவின் அதிபர் சார்பில் வாக்னர் படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜினுடன் இடைக்கால உடன்படிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். நாள் முழுவதும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. இந்த பேச்சுவார்த்தையின் போது, ரஷ்யாவில் படுகொலைகள் தொடர்வதை அனுமதிக்க முடியாது என்று எவ்ஜெனி பிரிகோஜினிடம் தெரிவிக்கப்பட்டது. ரஷ்யாவில் வாக்னர் படையின் ஆயுதம் ஏந்திய வீரர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், பதட்டங்களை தணிக்க நடவடிக்கை எடுக்கவும், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ விடுத்த கோரிக்கையை, வாக்னர் படைத் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் ஏற்றுக்கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் தனது போராளிகளுக்கு “பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு” ஈடாக தனது கலகத்தை கைவிடுவதற்கு ஒப்புக்கொண்டதாகவும், வாக்னரின் ஆயுதமேந்திய படையினரின் நடமாட்டத்தை நிறுத்தவும், பதற்றத்தைத் தணிக்க மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரஷ்யாவுக்கு எதிராக கலகம் செய்தவர்களை எளிதில் விட்டு விட மாட்டேன் என பேசிய புதின், தற்போது முடிவில் இருந்து இறங்கி வந்து உடன்படிக்கைகளை ஏற்றுக்கொண்டது புதின் தோல்வியை காட்டுவதாகவே புதின் எதிர்ப்பாளர்கள் கூறிவருகின்றனர்.