ஆன்மிகத்தால் மக்களை பிரிக்கும் கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் ‘இந்து அறநிலையத்துறை கண்காணிப்பில் இந்து ஆலயங்களை காப்போம்’ என்ற சிறப்பு மாநாடு மதுரையில் இன்று நடைபெற்றது. இதற்கு மாநகர ஒருங்கிணைப்பாளர் என்.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். புறநகர் ஒருங்கிணைப்பாளர் வே.உமாமகேஸ்வரன் முன்னிலை வகித்தார். இம்மாநாட்டில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
மதவாத சக்திகளுக்கு தமிழக மண் இடம் தராது. திமுக ஆட்சியில் நடந்த ஆன்மிக புரட்சிபோல் எந்த ஆட்சியிலும் பார்த்திருக்க முடியாது. ஒருகால பூஜை திட்டத்தில் 13,589 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் தினந்தோறும் விளக்கேற்றுவதற்கு கூட வசதியில்லாத நிலையில் ரூ.129 கோடி நிதியை வழங்கி தமிழக முதல்வர் மேம்படுத்தினார். 1 லட்சமாக இருந்த மானியத்தை ரூ. 2 லட்சமாக உயர்த்திகாட்டிய பெருமை திராவிட மாடல் ஆட்சியைச் சேரும். ஒரு கால பூஜை நடைபெறும் கோயில்களுக்கு அர்ச்சகர்களுக்கு வருமானம் கிடையாது என்பதை உணர்ந்த முதல்வர் அவர்களையும் அங்கீகரித்து மாதந்தோறும் ரூ.1000 வழங்கினார். இதன் மூலம் தமிழகத்தில் 10 ஆயிரம் அர்ச்சகர் குடும்பங்களை வாழவைத்துள்ளார்.
மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட கோயில்கள் புராதன சின்னங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி 517 கோயில்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில்கள் என்று கண்டறிந்து அழியும் நிலையிலுள்ள 68 கோயில்கள், 48 உபயம் மூலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள 2022-23ம் ஆண்டில் ரூ.100 கோடியை மானியமாக தந்துள்ளார். இந்து சமயஅறநிலையத்துறை ஆரம்பிக்கப்பட்ட 1959ம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் நடைபெற்ற ஆட்சியில் அதிகமான திருக்கோயில்களுக்கு அரசு சார்பில் மானியமாக வாரி வழங்கியது திராவிட மாடல் ஆட்சிதான்.
அறநிலையத்துறையின் கண்காணிப்பில் ஆலயங்களை காப்போம் என்பதற்கு திமுக ஆட்சி இலக்கணமாகத் திகழ்கிறது. எப்போதும் இலக்கணமாக இருப்போம். மேலும் ஆலோசனைகளை வழங்கி எங்களை வழிநடத்துங்கள். அதன்படி செயலாற்றுவோம். ஆன்மிகத்தால் மக்களைப் பிரிக்கின்ற கட்சிகளுக்கு தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை இடமில்லை. இதுதிராவிட மாடல் ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில், சு.வெங்கடேசன் எம்பி, எம்எல்ஏக்கள் கோ.தளபதி, பூமிநாதன், மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில ஒருங்கிணைப்பாளர் அருணன், தமிழ் சைவ பேரவை தலைவர் மா.கலையரசி நடராஜன் ஆகியோர் பேசினர். முடிவில், பேராசிரியர் எஸ்.விவேகாநந்தன் நன்றி கூறினார்.