மேற்கு வங்கத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதி பெரும் விபத்து!

மேற்கு வங்க மாநிலம் பங்குரா அருகே இரண்டு சரக்கு ரயில்கள் மோதி விபத்தில் சிக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து சோகத்தில் இருந்து இந்தியர்கள் இன்னும் மீளவில்லை. அதற்குள் அடுத்தடுத்து ரயில் விபத்துகள் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதேசமயம் ரயில் தரம் புரண்டது, சரக்கு ரயில்கள் மோதி விபத்து போன்றவற்றில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மேற்கு வங்க மாநிலம் பங்குரா அருகே ரயில் விபத்து ஏற்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், பங்குரா அருகே ஒண்டா ரயில் நிலையம் அருகே இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்தில் சிக்கியுள்ளன. இதனால் காரக்பூர் – பங்குரா – அட்ரா வழித்தடத்தில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தில் மொத்தம் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. ரயில் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தகவலறிந்து ரயில்வே மீட்பு குழுவினர் சம்பவ இடததிற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை சரக்கு ரயில்கள் என்பதால் உயிர் பலி இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஒண்டா ரயில் நிலையம் அருகே விபத்து நடந்த இடத்தில் ரயில் பெட்டிகளை அகற்றி பாதையை சரிசெய்ய சுமார் 8 மணி நேரம் வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது.