கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் வீட்டில் கஞ்சா செடி வளர்தத்ததாக தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேர் உள்பட 5 மருத்துவ மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் சிலர் வீடுகளில் கஞ்சா செடிகளை வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் தீவிரமாக கஞ்சா நடமாட்டம் குறித்து கண்காணித்து வந்தனர். இதில் சிவமொக்கா டவுன் ஹலே குருபுரா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா விற்பனை நடப்பது தெரியவந்தது. இந்த தகவலின் பேரில் அதிரடியாக அந்த வீட்டிற்குள் புகுந்த போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், விஜயாபுரம் மாவட்டம் கீர்த்தி நகரை சேர்ந்த அப்துல் கயூம் (வயது 25) , அர்பிதா (வயது 24) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரிடம் இருந்து ரூ. 20 ஆயிரம் மதிப்பு மிக்க 466 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து வேறு எங்கேனும் இதேபோன்று வீட்டில் கஞ்சா வளர்த்து யாரேனும் விற்பனை செய்கிறார்களா? என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதில் சிவமொக்காவின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீடு ஒன்றில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா செடி வளர்க்க வைத்திருந்த செட் அப்-ஐ பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது, அந்த வீட்டில் வசித்து வந்த 3 இளைஞர்கள் தனி கூடாரம் அமைத்து நவீன முறையில் கஞ்சா செடி வளர்த்து வந்தனர். பல்பு மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்தி கஞ்சா செடியை வளர்த்து வந்தனர். உடனடியாக போலீசார் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்களில் இரண்டு பேர் தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் என்ற திடுக்கிட வைக்கும் தகவல் கிடைத்தது. கிருஷ்ணகிரியை சேர்ந்த விக்னராஜ் (வயது 28), தர்மபரி மாவட்டம் கடகத்தூரை சேர்ந்த பாண்டிதுரை, கேரளாவை சேர்ந்த வினோத் குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இணையதளத்தில் கஞ்சா செடி வளர்ப்பது எப்படி என பார்த்து , அவற்றை பல்பு எலக்ட்ரானிக் செட் அப் அமைத்து வளர்த்து வந்ததாகவும் கைதான மூன்று பேரும் போலிசில் தெரிவித்தனர். கஞ்சா செடியை வளர்த்து வந்ததுடன் அவற்றை பறித்து காயவைத்து பிறகு திருட்டுத்தனமாக விற்பனை செய்தும் வந்து இருக்கிறார்கள். அவர்களிடம் கஞ்சா மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா செடி வளர்த்து வந்ததாக கைதான 5 பேரும் சிவமொக்கா புறநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் படித்து வந்த மருத்துவ மாணவரக்ள் என்பது தெரியவந்தது. அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் கஞ்சா செடிகளை வளர்த்து அவற்றை விற்பனை செய்து வந்துள்ளனர்.