செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கனவே ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட பின் அவர்கள் எப்படி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியும் என்று அமலாக்கத்துறை கேள்வி எழுப்பி உள்ளது.
அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி என் கணவரை சட்ட விரோதமாக கைது செய்துள்ளனர். அவரின் கைதுக்கான காரணத்தை கூறவில்லை என்று செந்தில் பாலாஜி மனைவி மேகலா தனியாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விசாரணையில் செந்தில் பாலாஜி மனைவி சார்பாக வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ ஆஜராகி வாதம் வைத்தார். செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான் என உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது என செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வாதம் வைத்துள்ளது.
இன்று வழக்கில் அமலாக்கத் துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வைத்த வாதத்தில், 2002 ஆம் ஆண்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ஜூன் 13 ஆம் தேதி சென்னையில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அமைச்சர் உடனிருந்தார். ஆனால் மனுதாரர் கூறியபடி அந்த நேரத்தில் அவர் காவலில் வைக்கப்படவில்லை. கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், கைது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தது. சம்மனை கையெழுத்து போட்டு பெற்றுக் கொள்ள செந்தில் பாலாஜி மறுத்து விட்டார். இதுசம்பந்தமான ஆவணங்கள் ஜூன் 16ம் தேதி தான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வேலை வாய்ப்பு மோசடியில் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தியது உறுதியாகி உள்ளது. அவர் அவ்வளவு பெரிய பண வைப்புத்தொகையை பெற்றது எப்படி என்பதை நிரூபிக்கவில்லை. அவரது உண்மையான வருமானத்தில் இருந்துதான் அந்த பணம் வந்தது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. அதனால் கைது நியாயம் ஆனதே. கைது செய்யப்பட்ட நேரத்தில், அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது, அந்த காரணங்கள் அவருக்கு வாசிக்கப்பட்டன, ஆனால் அவர் ஒப்புக்கொண்டு கையெழுத்திட மறுத்துவிட்டார். எனவே, இரண்டு சுயேச்சை சாட்சிகள் முன்னிலையில் கைது உத்தரவு/மெமோ நிறைவேற்றப்பட்டது, என்று கூறியது.
இதையடுத்து என். ஆர் இளங்கோ வைத்த வாதத்தில், நீதிமன்ற காவலில் வைக்கும் போது இதையெல்லாம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. கைதுக்கான காரணங்களை தெரிவித்து தயாரிக்கப்பட்ட மெமோவில் செந்தில் பாலாஜி கையெழுத்திட மறுத்தார் என்பது குறித்து எந்த பதிவு இல்லை என்று கூறினார்.
இதற்கு அமலாக்கத்துறை வைத்த பதில் வாதத்தில், கைது குறித்து செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குக்கு தகவல் தெரிவித்ததாக மொபைல் ஸ்கிரீன் ஷாட் இணைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கப் பிரிவு கூறுகிறது. இதுசம்பந்தமாக காலை 8:12 மணிக்கு தான் அனுப்பப்பட்டுள்ளது. கைது மொமோவோ, சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப்படி, ஆதாரங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. கைதுக்குப் பின் அதற்கான காரணங்களை தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளது. கைது செய்யும் போது அதற்கான காரணங்களை கூற வேண்டும் என சட்டத்தில் கூறவில்லை. நீதிமன்ற காவலில் வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை. நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்படவில்லை. ஆட்கொணர்வு வழக்கு தொடர முடியாது. நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பிக்கும் முன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டதால், சட்டவிரோத கைது என கூற முடியாது. செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் தான் உள்ளாரே தவிர அமலாக்கத் துறை காவலில் இல்லை. அதனால் அவரை ஆஜர்படுத்தி, விடுவிக்கும்படி கோர முடியாது. ஜூன் 14 அதிகாலை 1:39 கைது; நீதிமன்ற காவலில் வைக்க கோரிய மனு 24 மணி நேரத்துக்குள் தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப்படி, ஆதாரங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. கைதுக்குப் பின் அதற்கான காரணங்களை தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளது. கைது செய்யும் போது அதற்கான காரணங்களை கூற வேண்டும் என சட்டத்தில் கூறவில்லை. நீதிமன்ற காவலில் வைக்க ஆஜர்படுத்தும் போது தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோர அமலாக்கத் துறைக்கு உரிமை உள்ளது. அதை நீதிமன்றமும் பரிசீலிக்கலாம். உரிய ஆதாரங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டால் கைது செய்த அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி வேலைக்கு பணம் பெற்றார் என்பதற்கான ஆதாரம் உள்ளது. அதன் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டார். கைது செய்த 10 மணி நேரத்துக்குள் கைது குறித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது; கைதுக்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டது; ஆனால் செந்தில் பாலாஜி அதைப் பெற மறுத்து விட்டார். கைது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதற்கும், கைதுக்கான காரணங்களை தெரிவித்த ஆவணத்தை செந்தில் பாலாஜிப்பெற மறுத்ததற்கான ஆதாரங்களும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன, கைதின் போது செந்தில் பாலாஜிக்கு சட்ட உதவிகள் கிடைத்தன. அப்போது மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ உடனிருந்தார் என்று அமலாக்கத்துறை வாதம் வைத்துள்ளது.