புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் ரவிக்குமார் எம்.பி கோரிக்கை!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளரும், விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் இன்று நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

பின்னர் ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசின் இந்து சமய நிறுவனங்கள் துறையின் கீழ் புதுச்சேரி மாவட்டத்தில் 179, காரைக்கால் மாவட்டத்தில் 49, ஏனாம் மாவட்டத்தில் 3 என மொத்தம் 231 கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்கள் ஒவ்வொன்றையும் அறங்காவலர் குழுக்கள் மூலம் நிர்வகிக்கிறார்கள். தமிழகத்தில் 1970-ம் ஆண்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம், அப்போதைய முதல்வர் கருணாநிதியால் இயற்றப்பட்டது. இது தொடர்பாக தற்போது உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது.
அர்ச்சகர் நியமனங்கள் சாதி, பிறப்பு, பாரம்பரியம் அடிப்படையில் இருக்கக் கூடாது. தகுதியின் அடிப்படையில் ஆகமங்கள், சடங்குகள் ஆகியவற்றில் பயிற்சி இருந்தால் எவரையும் அர்ச்சகராக நியமிக்க எந்த தடையும் இல்லை என்றும் அந்த தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.

அதனடிப்படையில் புதுச்சேரியிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை இயற்ற வேண்டும். தமிழக அரசால் தொடங்கப்பட்டது போல் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை புதுச்சேரி அரசும் தொடங்கி ஆர்வமுள்ளவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். காலதாமதம் ஏற்பட்டால் அதுவரை தமிழக அரசின் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் பயில்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்று முதல்வரிடம் மனு அளித்து கேட்டுள்ளேன். நிச்சியமாக அதனை செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கின்றார்.

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் இயக்குநர், பேராசிரியர்கள் இல்லாமல் செயல்படாத நிலையில் இருக்கிறது. தமிழின் மீது அக்கறை கொண்ட முதல்வர் அந்த நிறுவனம் முன்புபோல சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். அதனையும் செய்து தருவதாக கூறியிருக்கின்றார்.

பாட்கோ கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. அது இன்னும் அரசாணை பிறப்பிக்காமல் நடைமுறைக்கு வராமல் உள்ளது என்று சுட்டிக்காட்டினோம். விரைவில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று சொல்லியுள்ளார்.

புதுச்சேரியில் வாழும் புலம் பெயர்ந்த பட்டியலினத்தவர் குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்டவற்றில் சலுகைகள் அளிக்கவும் புதுச்சேரி முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. கியூட் போன்ற மத்திய அரசின் தேர்வுகளால் மாநில உரிமை பறிக்கப்படும். ஆகவே, மத்திய அரசின் தேர்வு முறையை புதுச்சேரி அரசு எதிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.