டிஜிபி சைலேந்திர பாபுவை வேங்கைவயலும் தலித்துகளின் கதறலும் தூங்க விடுமா?: வன்னியரசு

மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றியது, மற்றும் அதனை எதிர்த்து போராடிய மக்களை கைது செய்தது தொடர்பாக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கூறியுள்ளதாவது:-

இந்த வீடியோவை ஒரு முறை மனசாட்சியுடன் பாருங்கள் தமிழ்நாடு காவல்துறை அவர்களே! மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள மேலப்பட்டி கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கொடி 2008 ஆம் ஆண்டிலிருந்து பறந்து கொண்டிருக்கிறது. அதற்கு முன் சரியாக 40 ஆண்டுகளுக்கு முன் அதே இடத்தில் திரு.வை.பாலசுந்தரம் அவர்கள் அம்பேத்கர் மக்கள் இயக்கக்கொடியை ஏற்றியுள்ளார். இப்போது திடீரென சாதி இந்துக்களுக்கு இந்த கொடிகள் மீது வெறுப்பு ஏற்பட்டு அகற்றுவதற்கு முயற்சித்துள்ளனர். இதற்கு அவ்வூரின் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி தீபா பாதமுத்து உடந்தை. பொது இடத்தில் இருக்கிறதா? பட்டா நிலத்தில் இருக்கிறதா? என்பது குறித்து மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே இந்த வழக்கு குறித்த விபரங்களை விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், காவல்துறை அவசரம் அவசரமாக சாதியவாதிகளுக்கு ஆதரவாக அறிக்கையை ஒப்படைத்தது. இதன் வழக்கு வரும் 5.6.2023 அன்று நீதிமன்றத்தில் வருகின்றது. இந்த சூழலில், காவல்துறை விடுதலைச் சிறுத்தைகள் கொடிக் கம்பத்தையும் அம்பேத்கர் மக்கள் இயக்கக் கொடிக் கம்பத்தையும் இடித்து அகற்றியுள்ளனர்.

காவல்துறைக்கு நாம் வைக்கக்கூடிய கேள்விகள்.

1. இக்கொடிக்கம்பங்களால் ஏதேனும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறதா?
2. தனிநபர் நிலத்தில் கொடி கட்டப்பட்டதா? அல்லது பொது இடத்தில் கட்டப்பட்டுள்ளதா?
3. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே அவசரம் அவசரமாக கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கான காரணம் என்ன?
4. ஒரே வழக்குக்காக இரு நீதிமன்றத்தை நாடி காவல்துறையை ஏமாற்றிய பாத முத்து நாடாருக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவது ஏன்? இந்த கேள்விகளுக்கெல்லாம் தங்களிடம் பதில் இருக்கிறதா? தங்களது உயிரைவிட அதிகமாக நேசிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கொடியை பாதுகாக்க பெண்களும் பெரியவர்களும் போராடுகிறார்கள். அதற்காக 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பது ஞாயமா? காவல்துறை மீது கல்லெறிந்து வீசியதாக பொய்யான வழக்கு போடுவது சரியா?

நாட்டில் எத்தனையோ கொடி பறக்கிறது. ஆனால், இந்திய ஒன்றியத்தின் ஆளுமையிலிருந்து தமிழ்நாட்டையும் தமிழர் இறையாண்மையையும் காப்பதற்காக களமாடி வருகிற எமது தலைவர் திருமாவளவன் அவர்கள் அடையாளப்படுத்திய விடுதலைச் சிறுத்தைகள் கொடி பறக்கக்கூடாதா? எங்கள் கொடி எடுத்தால் தான் சட்டம் – ஒழுங்கு பாதுகாக்க முடியுமா? பதில் சொல்லுங்கள் திரு.சைலேந்திர பாபு அவர்களே! வரும் 30 ஆம் தேதி தாங்கள் பணி நிறைவு செய்யப்போகிறீர்கள். வாழ்த்துகள். ஆனால் உங்களால் தூங்க முடியுமா? வேங்கைவயலும் தலித்துகளின் கதறலும் தூங்க விடுமா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.