கமல்ஹாசனின் அரசியல் நிலைப்பாடு பெருமளவு மாறிவிட்டது: வானதி சீனிவாசன்

காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளரை போன்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் செயல்பாடுகள் உள்ளன என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. பெண் பேருந்து ஓட்டுநர். இவர் கோவை காந்திபுரம் முதல் சோமனூர் செல்லும் தனியார் பேருந்தில் பணிபுரிந்து வந்தார். இதையடுத்து கோவை தெற்கு சட்டசபை உறுப்பினர் வானதி சீனிவாசன் ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் பயணம் செய்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதையடுத்து தூத்துக்குடி எம்பி கனிமொழி, ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் கடந்த வெள்ளிக்கிழமை காந்திரபுரத்தில் இருந்து ஹோப்ஸ் வரை பயணம் செய்தார். கனிமொழி பயணத்தின் போது அந்த பேருந்தில் பணியாற்றி வரும் பெண் பயிற்சி நடத்துநர், கனிமொழி எம்பியிடம் பேருந்து பயணத்திற்கு கட்டணம் கேட்டுள்ளார். கனிமொழி தனது பிஏ மூலம் டிக்கெட்டை பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து கனிமொழி ஹோப்ஸ் சாலை அருகே இறங்கிவிட்டார். பின்னர் ஷர்மிளா, கனிமொழி எம்பியிடம் ஏன் டிக்கெட் கேட்டீர்கள் என பெண் பயிற்சி நடத்துநரிடம் கேட்டுள்ளார். இதையடுத்து நான் வேலையை விட்டு நிற்க போகிறேன் என ஷர்மிளா கூறியதாக தெரிகிறது. இதனிடையே உரிமையாளர் துரைகண்ணுவிடம் பெண் நடத்துநர், கனிமொழி எம்பியிடம் நடந்து கொண்ட விதம் குறித்து ஷர்மிளா புகார் கூறியுள்ளார். ஆனால் உரிமையாளரோ இதையெல்லாம் விளம்பரத்திற்காக செய்கிறாயா என கேட்டதால் அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா சிறிது நேரத்தில் அந்த பேருந்து நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கமல்ஹாசன், ஷர்மிளாவை வரழைத்து அவருக்கு வாடகைக் கார் ஓட்டுவதற்காக புதிய காரை பரிசளித்துள்ளார். இதுகுறித்து வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளரை போன்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் செயல்பாடுகள் உள்ளன. விளம்பர அரசியலுக்காக பெண் பேருந்து ஓட்டுநர ஷர்மிளாவுக்கு கார் வழங்கியுள்ளார். கோவை மக்களின் கவனத்தை பெறவே ஷர்மிளாவுக்கு கார் வழங்கியுள்ளார். கமல்ஹாசனின் அரசியல் நிலைப்பாடு பெருமளவு மாறிவிட்டது என கடுமையாக விமர்சித்துள்ளார்.

கமல்ஹாசன் கடந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் வானதியை எதிர்த்து போட்டியிட்டு மிகவும் சொற்ப வாக்குகளில் தோல்வி அடைந்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் தனக்கு செல்வாக்கு உள்ளதாக கருதப்படும் கோவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கோவை ஷர்மிளாவுக்கு கமல் உதவி செய்திருப்பது அரசியல் ரீதியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.