தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் சாதி மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட உறுதி பூணுவோம் என தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அரிக்கையில் கூறியுள்ளதாவது:-
தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைத் தூதரின் தியாகங்களை நினைத்துப் பார்த்து அவருடைய வழியை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுவதுதான் பக்ரீத் திருநாள்.
இறைத் தூதரின் தியாகங்களை நினைவுகூருவதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கும், நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும் தடைக் கற்களாக விளங்குகின்ற ஆணவம், அநீதி, துரோகம், சூழ்ச்சி ஆகியவை ஒழிந்து நல்ல எண்ணங்களும், மனித நேயமும் தழைத்தோங்கும் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் சாதி மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட உறுதி பூணுவோம். இறை நம்பிக்கையும், மனித நேயமும் பரவட்டும்; அமைதி நிலவட்டும், ஆனந்தம் பெருகட்டும் என்று வாழ்த்தி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய “பக்ரீத்” திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.