சேலம் பெரியார் பல்கலைக்கழத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கறுப்புச் சட்டை அணிந்து வரக்கூடாது என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் திடீரென திரும்பப் பெற்றுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று (ஜூன் 28) பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனிடையே, இந்த நிகழ்ச்சியின் போது ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்புக் கொடி காட்டுவதற்கு சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியது. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் செய்துள்ளனர். இதனைக் கருத்தில்கொண்டு, பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம், தன்னுடன் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை நேற்று அனுப்பியது. அதில், பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா ஆளுநர் ஆர்என் ரவி தலைமையில் நடைபெறவுள்ளதாகவும், இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் அனைவரும் கறுப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்புக்கு பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், திராவிட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளுநர் கலந்துகொள்கிறார்கள் என்பதற்காக யாரும் கறுப்புச் சட்டை அணிந்துவரக் கூடாது எனக் கூறுவது மனித உரிமை மீறல் எனவும் பலர் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். இதையடுத்து, இதுதொடர்பான பிறப்பித்த சுற்றறிக்கையை தாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்வதாக பெரியார் பல்கலைக்கழகம் நேற்று அறிவித்துள்ளது.